முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடிவுக்கு வந்தது நெகட்டிவ் விகிதம்: 17 ஆண்டுகளுக்கு பின் வட்டி விகிதத்தை உயர்த்தி ஜப்பான் மத்திய வங்கி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2024      உலகம்
Japan 2024-03-19

டோக்கியோ, எதிர்மறை வட்டி விகிதங்கள்  முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஜப்பான் மத்திய வங்கியானது, கடந்த 8 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்திய எதிர்மறை வட்டி விகிதங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கையின் பிற அம்சங்களை நேற்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு வட்டி விகிதம் மைனஸ் 0.1 சதவீதம் என இருந்த நிலையில், புதிய வட்டி விகித கொள்கை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய வங்கியில் வைப்புத் தொகைக்கு 0.1 சதவீதம் வட்டி செலுத்தப்படும். குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மைனஸ் 0.1 சதவீதத்திலிருந்து 0 முதல் 0.1 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளில் முதல் வட்டி விகித உயர்வாக இருப்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பொருளாதாரத்தின் மீதான தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும், நிதி சேவை நிறுவனமான போபா செக்யூரிட்டி நிறுவனத்தின் ஜப்பான் பிரிவு தலைவர் இசுமி தேவலியர் தெரிவித்துள்ளார். 

ஜப்பன் மத்திய வங்கி அதன் நிதி நிலைமைகளை தளர்வாக வைத்திருக்கும் கொள்கையை தொடர்ந்து பராமரிக்கும் என்றும், நிதி செலவுகள் அல்லது வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் உயர்வு இருக்காது என்றும் அவர் கூறினார். 

ஜப்பான் மத்திய வங்கியானது, எதிர்மறை வட்டி விகிதங்களிலிருந்து வெளியேறும் கடைசி மத்திய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து