முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழகத்தின்  அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தர குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் - தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழகம் உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் 888 பேர் அமரக் கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும், கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? 

சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா?. பா.ஜ.க. ஏன் வரவே கூடாது?.தமிழகத்தின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்சநீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். 

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக்காசாக்கி விடும்.வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்து கொண்டிருக்கிறோம். 

அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழகத்தின்  அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தர குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழகத்தின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.  

மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றி பெற மாட்டார்கள். மக்களவையில் தமிழகத்தின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். 

இத்தனை வெளிப்படையாகத் தமிழகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம். பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழகத்தையும் காக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களிப்போம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து