முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சி: தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் இன்று இறங்குகிறார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Kallazhagar 2024-03-19

Source: provided

மதுரை : மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். 

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ம் தேதி தொடங்கியது. 3-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி எழுந்தருளினார். 

வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெளிபிரகாரங்கள் வழியாக மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் புறப்பாடு நடந்து, 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலை அடைந்தது.

அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என முழங்கிய பக்தர்கள் கள்ளழகரை புடை சூழ்ந்து வந்தனர். 

முன்னதாக தானியங்களையும், பணமுடிப்புகளையும் காணிக்கையாக செலுத்தினர்.பொய்கைக்கரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  மொத்தம் 483 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

இந்த நிலையில், அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், நேற்று காலையில் மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் கோவிந்தா கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக இன்று அதிகாலையில் 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து  கள்ளழகர் இறங்குகிறார். இதைக்காண மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். 

நாளை 24-ம் தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் சிறப்பாக செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து