முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1-2025-04-30

சென்னை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நெருக்கடியைப் பார்த்து வளர்ந்திருக்கக் கூடியவர்கள் நாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., வேலுவின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:- சட்டமன்ற உறுப்பினரான வேலு கட்சியில் பொறுப்பேற்று பணியாற்றி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஏதோ, ஊர்ந்து வந்து ஏறவில்லை. தவழ்ந்து வந்து ஏறவில்லை, படிப்படியாகதான் ஏறியிருக்கிறார். ஊர்ந்து, தவழ்ந்து என்று சொல்கின்றபொழுது ஏன் கரவொலி எழுப்பினீர்கள் என்று எனக்கும் புரிகிறது. உங்களுக்கும் புரிகிறது.

ஒன்றும் இல்லை, நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நான் நிறைவாக காவல்துறை மானியக் கோரிக்கையில் பதிலளித்துப் பேசும்பொழுது தமிழ்நாட்டைப் பற்றி சொல்லும்போது, தமிழ்நாடு ஏற்கெனவே எப்படி இருந்தது. இப்போது எப்படி மாறியிருக்கிறது, வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிட்டு சொல்வதற்காக ஒரு உதாரணத்தை சொன்னேன். ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு கம்பீரமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னேன்.

அதற்கு, எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் உதயகுமார் நான் பேசி முடித்தபோது, அதோடு விட்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. நான் பேசியது அப்படியே போய் இருக்கும். வெளியிலும் வந்திருக்காது. பிரபலமாக இந்த செய்தியும் வந்திருக்காது. தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். நான் பேசி முடித்ததற்குப் பிறகு எழுந்து சபாநாயகரைப் பார்த்து முதல்வர் சிறப்பாக பேசினார். தெளிவாகப் பேசினார். அழகாகப் பேசினார். ஆனால், இடையில் “ஊர்ந்து வந்து” என்பதை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார்.

நான் உடனே கேட்டேன். ஊர்ந்து என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். குழந்தைகள் தவழ்ந்து வருவது தவறா? என்று சொன்னேன். ஏற்கெனவே, எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் இதே எடப்பாடி பழனிச்சாமி, அவரின் புகழைப் பற்றி பேசுகின்றபோது, அவர் எப்படியெல்லாம் முதல்வர் பதவிக்கு வந்தார் என்பது குறித்து அவரே பேசியிருக்கிறார். நான் தவழ்ந்து, தவழ்ந்து, படிப்படியாக வந்து முதல்வராக வந்திருக்கிறேன் என்று அவரே பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. நான் நேற்றுதான் பார்த்தேன். முன்பே பார்த்து இருந்தால் சட்டமன்றத்தில் சொல்லியிருப்பேன்.

அப்போது கூட கேட்டேன். உதயகுமார் சட்டப்பேரவையில் எழுந்து நின்று, விடாமல் “தவழ்ந்து” என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள், வேண்டாம், என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நான் சொன்னேன். யாரையாவது குறிப்பிட்டு நான் பேசியிருப்பதாக நீங்கள் கருதினால், யார் என்று சொல்லுங்கள். நான் எடுத்துவிடுகிறேன். அதற்கு நானே சிபாரிசு செய்கிறேன் என்று சொன்னேன். உட்கார்ந்துவிட்டார். இதுதான் நடந்தது.

ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. அந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும் நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பில் மானியக் கோரிக்கைகளை விவாதித்து அதற்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் சொல்லியிருக்கின்றோம். அதைத் தொடர்ந்து 110-விதியைப் பயன்படுத்தி என்னென்ன பணிகளையெல்லாம் நாம் நிறைவேற்றப்போகிறோம்.

அதற்குப் பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் நீங்கள் தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில் நன்றாகப் பார்த்திருப்பீர்கள். ஆகவே, இன்றைக்கு மற்ற மாநிலத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே, உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாம் சொல்லியிருக்கிறோமோ, அந்த வாக்குறுதிகளை படிப்படியாக இன்றைக்கு எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது சொல்லப்பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளும் விரைவாக நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றப்பட்டு நான் உறுதியோடு சொல்கிறேன். இங்கு கூட பேசுகின்றபோது சிலர் சொன்னார்கள். கண்ணப்பன் பேசுகின்றபோது சொன்னார். 200 அல்ல 220 வரும் என்று அவர் சொன்னார். அதில் என்ன கஞ்சம் 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை.

ஏன் என்றால், செல்லும் இடங்களிலெல்லாம் அந்த வரவேற்பைப் பார்க்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்கின்றபோது நான் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தே செல்கிறேன். அப்போது, மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியைப் பார்க்கும்போது உள்ளபடியே மெய் சிலிர்த்துப்போகிறேன். ஆகவே, நிச்சயமாக, உறுதியாக நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடுதான் நாம் இன்றைக்கு நம்முடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.

எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது வருமான வரித் துறையாக இருந்தாலும் சரி அல்லது புலனாய்வுத் துறையாக இருந்தாலும் சரி, சி.பி.ஐ. வைத்து மிரட்டக்கூடியதாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை என்ற எந்த துறையாக இருந்தாலும் சரி இப்படி எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நெருக்கடியைப் பார்த்து வளர்ந்திருக்கக்கூடியவர்கள் நாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து