முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

திங்கட்கிழமை, 26 மே 2025      தமிழகம்
Rain 2024 12 10

Source: provided

கோவை : தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். அதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது நேற்றுமுன்தினமே கேரளாவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 35 செ.மீ. மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பில்லூர் அணையில் நேற்றுமுன்தினம் திடீரென நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து இரவில் 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குளிப்பதற்கோ, துணி வைப்பதற்கோ யாரும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால் பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

ஊட்டிக்கு சுற்றுலா வந்த 15 வயது சிறுவன் மரம் முறிந்து விழுந்ததில் பலியானதை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே நீலகிரியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைப்பயிர்த் தோட்டங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நேற்று 2-வது நாளாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற அதிகனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. இதனால் மழை பொழிவு மேலும் அதிகரித்து சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அங்கு சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

ஒரு வார காலம் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் தீவிரமடைந்து காணப்படுகிறது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ, மேல் பவானி 30 செ.மீ மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 21 செ.மீ அதி கனமழை பதிவாகியுள்ளது. ரத்னகிரி அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெலுங்கானா பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மே 31-ந்தேதி வரை பருவமழை தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொடுக்க கூடும். இருவேறு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மும்பை மாநகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்க கூடும். அவ்வாறு தொடங்கும் நிலையில் அது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இயல்பிற்கு முந்தைய தொடக்கமாக அமையும். அதேபோல கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து