Idhayam Matrimony

வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Modi 2024-12-04

தூத்துக்குடி, வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், அன்று ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ம் தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ம் தேதிகளில் மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். மாலத்தீவு சுதந்திர விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி 26-ம் தேதி (சனிக்கிழமை) இரவு அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக தூத்துக்குடிக்கு வர இருக்கிறார். 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முன்னதாக 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் சற்று மாற்றம் செய்யப்பட்டு ஒருநாள் முன்னதாக 26-ம் தேதியே தமிழகத்துக்கு வருகிறார். அன்று இரவு 8 மணி அளவில் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்.

விமான நிலைய பகுதியில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் புதிதாக கட்டப்பட்டு உள்ள விமான பகுதிக்கு செல்கிறார். தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருக்கு மட்டும் 9 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விமான நிலையம் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் இனிமேல் இரவு நேர விமான சேவையையும் தொடங்க முடியும். இதற்காக விமான நிலையத்தில் இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்து வந்த விமான நிலைய ஓடு பாதை தற்போது 3 ஆயிரம் மீட்டர் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு வேறு சில நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அங்கு நடக்கும் விழாவில் ரூ.2,357 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழி சாலை, ரூ.200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.99 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதை மற்றும் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நாகர்கோவில் டவுன்-நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி ரெயில் பாதை இரட்டிப்பு ஆக்குதல் (21 கிலோ மீட்டர் தூரம்) ஆகிய முடிவுற்ற நலத்திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும் ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய விமான நிலையத்தின் ஆணைய தலைவர் விபின் குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், விமான நிலைய அதிகாரி சுரேஷ், சரத்குமார், அனில்குமார், விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) காட்வின், திட்ட இயக்குனர் பாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே பிரதமர் மோடியின் தூத்துக்குடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்க தன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவு 9.30 மணிக்கு பிரதமர் மோடி இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். அன்று இரவு அவர் திருச்சியில் தங்குகிறார். மறுநாள் (27-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை அவர் திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார். அங்குள்ள சிவாலயத்தில் ராஜேந்திர சோழ மன்னனின் திருவாதிரை பிறந்த நாள் விழா நடக்கிறது.

விழாவில் பங்கேற்பதற்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. ரோடு ஷோ முடிந்ததும் அவர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சாதாரணமான முறையில் சந்தித்து நலம் விசாரிப்பார். இதையடுத்து அவர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பார். விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிறகு இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.

விழாவில் ஆதீனங்கள், சாதுக்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை முக்கிய விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன் பிறகு அவர் தஞ்சை பகுதிக்கு செல்வாரா? அல்லது டெல்லிக்கு செல்வாரா? என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து