Idhayam Matrimony

மே.இ.தீவுகள் அணி வெற்றி

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
West-Indies 2024-05-27

Source: provided

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியில் ஹாசன் நவாஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஹுசைன் டாலட் 31 ரன்களும், அப்துல்லா சஃபீக் 26 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெடியா பிளேட்ஸ், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கிந்தியத் தீவுகளுக்கு 35 ஓவர்களில் 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் 33.2 ஓவர்களில் எட்டிப் பிடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

_______________________________________________________________________________________________

சல்மான்கானின் புதிய திட்டம் 

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற டென்னிஸ் பந்து டி-10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார்.  ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 சீசன் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.அதற்கு அடுத்தப்படியாக கொல்கத்தா 3 முறை கோப்பை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) என்ற டென்னிஸ் பந்து டி-10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சல்மான் கானிடம் ஐபிஎல் அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளாதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சல்மான் கான் கூறியதாவது:- ஐபிஎல் அணியை வாங்க எனக்கு இப்போது வயதாகிவிட்டது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் அணியை வாங்குவதற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதை ஏற்கவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று பதிலளித்தார்.

_______________________________________________________________________________________________

இளம் வீரருக்கு பி.சி.சி.ஐ. கெடு

8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம்பெற உள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவையும் உடற்தகுதியை நிரூபிக்க பி.சி.சி.ஐ. கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என்சிஏ- க்கு ஒரு குறுகிய பயணம்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். 

_______________________________________________________________________________________________

ரிக்கி அணியில் 2 இந்தியர்கள்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்கிய 5 ஆல் டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்தவர்களில் நவீன கிரிக்கெட்டில் அசத்திய விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோர் இடம்பெறவில்லை. அத்துடன் ஒரு ஆஸ்திரேலிய வீரரை கூட அவர் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

ஆனால் அந்த பட்டியலில் 2 இந்திய வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த 5 ஆல் டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் :- 1. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), 2. சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), 3. ராகுல் டிராவிட் (இந்தியா), 4. ஜோ ரூட் (இங்கிலாந்து), 5. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இது தொடர்பாக பாண்டிங் பேசுகையில், “நான் எதிர்கொண்டு விளையாடியதிலேயே பிரையன் லாரா மிகவும் திறன் மிகுந்த பேட்ஸ்மேன். நான் பார்த்ததிலேயே டெக்னிக்கல் அளவில் சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர். அதே போல ராகுல் டிராவிட். அவர்களுடன் தற்போது நான் ஜோ ரூட்டையும், வில்லியம்சனையும் சேர்ப்பேன்” என்று கூறினார். 

_______________________________________________________________________________________________

பும்ரா மீது கடும் விமர்சனம் 

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் வீரர்களுக்கான பணிச்சுமை மேலாண்மை என்பது முட்டாள்தனமானது இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவரும், வீரருமான சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ முக்கியமான போட்டிகளை முன்னணி வீரர்கள் தவற விடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) எப்படி ஏற்றுக்கொள்கிறது என தெரியவில்லை.  இந்திய அணியில் கேப்டன், தலைமை பயிற்சியாளரை விட உடல்தகுதி நிபுணர்தான் முக்கியமானவரா? அப்படி என்றால் தேர்வாளர்களின் பணி என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

_______________________________________________________________________________________________

கோலி குறித்து வெங்சர்க்கார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

இந்நிலையில் தான் தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால் விராட் கோலியை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டு ஓய்வு பெறுங்கள் என்று வற்புறுத்தியிருப்பேன் என இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் இந்திய தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால், இங்கிலாந்து தொடரில் விளையாடிய பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற விராட்டை வற்புறுத்தியிருப்பேன். ஏனெனில் இந்த தொடரில் அவரது தரமும் அனுபவமும் நமக்கு தேவைப்பட்டது ”என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து