முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், மார்ச் 6 -​ இத்தாலி கப்பல் ஊழியர்களால் 2 இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தாங்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தராததால் இடது கம்யூனிஸ்டு தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த மாதம் கேரளா அருகே கடல் பகுதியில் கொள்ளையர்கள் என நினைத்து 2 இந்திய மீனவர்களை இத்தாலி கப்பல் ஒன்றின் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மீனவர்களை சுட்டுக்கொன்ற அந்த இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் இருவரை கொல்லம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடத்த இடதுசாரி ஜனநாயக கூட்டணி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. 

இந்திய நாட்டிற்கும் இந்திய மீனவர்களுக்கும்  பாதுகாப்பு என்பது அபாய கட்டத்தில் உள்ளது என்றும் ஆனால் கேரள அரசு இத்தாலிய கப்பல் பாதுகாவலர்கள் இருவரையும் பாதுகாக்க முயற்சி செய்து வருகிறது என்றும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய பி.கே. குருதாஸ் கூறினார்.

இத்தாலிய கப்பல் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் அஜீஸ் பிங்குவின் இல்லத்திற்கு சென்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியோ பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியோ ஆறுதல் கூறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் உம்மன் சாண்டி மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய எல்லா நடவடிக்கைளையும் கேரள அரசு எடுத்து வருகிறது என்றார்.

கேரள கடலோர பகுதியில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக மேலும் 10 கடலோர காவல் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதல்வரின் இந்த பதிலை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். 

ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து இடது கம்யூனிஸ்டு  தலைமையிலான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்