முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நஷ்டஈடு வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - யானையால் உயிரிழப்பு, பயிர் சேதம் ஏற்பட்டால் நஷ்டஈடு வழங்க ரூ.10 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பச்சைமால் கூறியுள்ளார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு), மோகன் (அ.தி.மு.க.), கலையரசு (பா.ம.க.), சுரேஷ்குமார் (தே.மு.தி.க.) ஆகியோர் யானைகள் திடீரென்று ஊருக்குள் புகுந்து உயிர் சேதம், பயிர் சேதம் ஏற்படுத்துவது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பச்சைமால் கூறியதாவது:-​

வனப்பகுதிகள் அருகில் உள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து பயிர் சேதம் செய்வதையும், உயிர் சேதம் ஏற்படுத்துவதையும் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சூரிய மின்வேலி அமைத்தல், அகழிகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. கோடைகளில் தண்ணீரை தேடி யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

யானைகள் விரும்பி உண்ணும் பயிர்களை காட்டுப்பகுதிகளில் வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானைகளை காட்டுக்குள் விரட்ட பயிற்சி பெற்ற ஊழியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். ஊருக்குள் புகும் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி காட்டுக்குள் கொண்டு விட மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

யானை வருவதை தடுக்க கோவை வனப்பகுதியில் சூரிய மின்வேலி அமைப்பது போன்ற பணிகளுக்காக ரூ. 430 கோடியும், தர்மபுரி, திண்டுக்கல் பகுதியில் ரூ. 519 கோடியும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. யானை தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல் கட்டமாக வனத்துறை மூலம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. பின்னர் முதல்​அமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 2 லட்சம் கொடுக்கப்படுகிறது. நஷ்டஈடாக மொத்தம் ரூ. 3 லட்சம் வழங்க முதல்​ அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு இதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பச்சைமாலின் நீண்ட பதிலை கேட்ட சபாநாயகர் ஜெயக்குமார், யானை கூட்டமே ஓடி விடும் அளவுக்கு நீண்ட பதிலை அமைச்சர் கூறியிருக்கிறார் என்றார். இதையடுத்து சபையில் சரிப்பொலி ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்