முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படும்: மிஸ்ரா

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.29 - தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.   மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் கோஆப் டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டராக இருந்த அன்சுல்மிஸ்ரா மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 9 மணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா முன்னாள் கலெக்டர் சகாயத்திடம் இருந்து பொறுப்புக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரை மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நான் ஏற்கனவே கூடுதல் கலெக்டராக மதுரை மாவட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். மதுரை மாவட்டத்தை எனக்கு நன்கு தெரியும். தமிழக அரசு சார்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை சிறப்பாக ஒளிவு மறைவற்ற முறையில் மக்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வேன்.

மக்கள்  எந்த நேரத்திலும் என்னை நேரில் சந்திக்கலாம். தொலைபேசியிலும் பேசலாம். நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பணியாற்றிய மாவட்ட கலெக்டரின் நல்ல பணிகளை தொடர்ந்து செய்வேன். மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். மதுரை மாவட்டத்தை ஒரு மாதிரி மாவட்டமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சிறப்பாக சென்றடைய வேண்டுமென்பது எனது நோக்கம். தமிழக முதலமைச்சரை, மாவட்ட கலெக்டராக பணிஅமர்த்தியதற்கு வாழ்த்து பெற அவரை நேரில் சந்தித்த போது மதுரை மாவட்டம் ஒரு முக்கியமான மாவட்டம். அங்கு மிகவும் கவனமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.  அரசு சட்டதிட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே குவாரியாக இருந்தாலும் சரி, மற்ற எதுவாக இருந்தாலும் சரி அரசு சட்ட திட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நான் ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்துள்ளேன். மதுரையில் ஊரக வளர்ச்சி துறையிலும் பணி புரிந்துள்ளேன். இந்த பணிகளில் கிடைத்த அனுபவங்களை கொண்டு நான் சிறப்பாக பணியாற்றுவேன். மதுரை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி ஒருங்கிணைந்து பணியாற்றுவேன். டெங்குகாய்ச்சல் பரவுவதை தடுக்க தனி பிரிவு ஏற்படுத்தப்படும். மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கவும் ஆலோசிக்கப்படும்.

ஆக்கிரமிப்பு பொறுத்தவரை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அகற்றப்படும். குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படும். வணிக வளாக பகுதிகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக அகற்றப்படும். அரசு அலுவலர்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் எந்த வித புகார்களுக்கும் இடமின்றி பணியாற்ற வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடைத்தரர்கள் தலையீடு முற்றிலுமாக ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அலிஅக்பர், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்