முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் பற்றாக்குறையை போக்க திட்டங்கள் குறித்து ஆய்வு

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.24 -தமிழ்நாட்டில் தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை போக்க புதிய மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆய்வு நடத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் மின் பற்றாக்குறையினை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தற்போது நடைபெற்று வரும் புதிய மின் திட்டங்கள் குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையில் நேற்று (23.8.2012) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர்,  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து மேற்கொண்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்று அலகுகள், 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல்மின் திட்டம் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் திட்டத்தின் இரண்டு அலகுகள் ஆகியவற்றில் உள்ள முன்னேற்றம் குறித்தும், தமிழ்நாட்டில் நிலவும் பொதுவான மின் நிலைமை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, தற்போது வல்லூர், மேட்டூர் மற்றும் வட சென்னை அனல் மின் திட்டப் பணிகளை மேலும் விரைந்து மேற்கொண்டு, விரைவில் மின் உற்பத்தியை தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் மின் பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்