முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடி நாள் வாழ்த்து

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.7 - தாய்த்திருநாட்டை காக்கும் படைவீரர் நலன்களுக்காக கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது தாய்த் திருநாட்டின்  எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7​ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும்,  பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும்,  ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும். இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

எனது தலைமையிலான தமிழக அரசு, முன்னாள் படைவீரர்களின் நலனைக் காக்கும் வகையில், அவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையிலான பணிநியமன விதிகளை எளிமைப்படுத்தி, பணிநியமனம் வழங்குதல், மின்திருட்டு தடுப்புப் பிரிவின் பணியினை முன்னாள் படை வீரர்களைக் கொண்டு செயல்படுத்துதல், கோயில் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களின் தொகுப்தியத்தினை உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் முன்னாள் படை வீரர்களை சிறப்பு செய்து வருகிறது.

தாய் திருநாட்டை காக்கும் தியாகச் சுடர்களாம் முப்படை வீரர்களின் நலன் காக்க, படைவீரர் கொடி நாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென தமிழக மக்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்