முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமதாஸ் மீது மீண்டும் கருணாநிதி காட்டம்

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.7 -  தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளித்ததை எல்லாம் மறந்துவிட்டு எனக்கு வன்னியர் மீது வன்மம் என பேசுகிறார் என்றால் டாக்டர் ராமதாசுக்கு என் மீது எவ்வளவு வன்மம் உள்ளது என்பது புரிகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: கூட்டணிக்காக கையேந்தும் நிலை பா.ம.க.வுக்கு இல்லை, தேர்தலில் தனித்து போட்டியிட தி.மு.க. தயாரா? என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே?

பதில்: அப்படியா? தமிழகத்தின் கடந்தகால அரசியல் சரித்திரத்தை உணர்ந்தவர்களுக்கு, கூட்டணிக்காக கையேந்தும் நிலையில் பா.ம.க. இல்லை என்பது உண்மையா என்று நன்றாகத் தெரியுமே! மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியைக் கேட்டாலே உண்மைகளைச் சொல்வாரே?

கேள்வி: பா.ம.க. மீதும் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மீதும் சாதி வெறியைக் கிளப்பி, அவதூறு குற்றச்சாட்டுகளைத் தாங்கள் சுமத்தியிருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

பதில்: செய்தியாளர் ஒருவர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்புகின்ற வகையில் பேசிக் கொண்டே இருக்கிறாரே, அதைப்பற்றி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே? என்று கேட்டபோது, சாதி வெறியை கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய கருத்தும் வேண்டுகோளும் ஆகும் என்று தான் பதில் அளித்திருக்கிறேன். கேள்வி கேட்ட செய்தியாளர்கள் பா.ம.க. பற்றி கேட்ட போதிலும், நான் அளித்த எந்தப் பதிலிலும் பா.ம.க. என்ற வார்த்தையையோ, டாக்டர் ராமதாஸ் என்ற பெயரையோ பயன்படுத்தவே இல்லை.

வன்னியர்கள் மீது கருணாநிதிக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது என்றெல்லாம் பேசியிருக்கிறார் ராமதாஸ். வன்னியர்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று இவர்கள் போராட்டம் நடத்தி, அதிலே சிலர் உயிரிழக்க காரணமாக இருந்தார்களே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான், இவரை வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக நேரில் அழைத்து வரச் செய்து கலந்துரையாடி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு தி.மு.க. ஆட்சியிலே வழங்கி 28.3.1989-​ல் உத்தரவிடப்பட்டது.

இதையெல்லாம் டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு, வன்னியர்கள் மீது எனக்கு வன்மம் இருப்பதாகப் பேசியிருக்கிறார் என்றால், அவர் எந்த அளவிற்கு என் மீது வன்மம் கொண்டுள்ளார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டாக்டருக்கு மட்டுமல்ல; நான் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் ​ வெறுப்பு அரசியல் வேண்டாமே!

கேள்வி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தி.மு.க. ஆதரிப்பதைப்போல தமிழ் நாட்டில் உள்ள மார்க்சிஸ்ட்கள் பிரச்சாரம் செய்கிறார்களே?

பதில்: இங்கேயுள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் அந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக அவ்வாறு அறிக்கைவிட்ட போதிலும், அந்தக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசும்போது, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கூட்டணி கட்சியான தி.மு.க.வும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிரானது என்று உண்மையை வெளிப்படையாகப் பேசியது மகிழ்ச்சி தருகிறது. மத்தியில் நிலையான அரசு வேண்டும் என்பதை மட்டும் கருதி இந்தப் பிரச்சினையில் மத்திய அரசை தி.மு.க. ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறேன். தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டினைத்தான் சிலர் மாற்றி கட்சி மாச்சர்யத்தோடும், உள்நோக்கத்தோடும் திசை திருப்பிப் பேசி வருகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்