முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பணிநியமனம்

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.8 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (7.12.2012)  தலைமைச் செயலகத்தில், கொடிநாளை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, கல்வி உதவித் தொகை, முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண உதவித் தொகை, படைப்பணியில் உயிர் துறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு உதவித் தொகை, போற்றத்தக்க பணி புரிந்தமைக்கான பதக்கம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த படைவீரர்களுக்கு உயர்த்தப்பட்ட பணப்பயன்கள் ஆகியவற்றை வழங்கினார்.

கொடிநாள் விழா குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது தேசத்தின் பாதுகாப்பிற்காக பாடுபடும் ராணுவ வீரர்களின் பணித் திறமை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு ஆகியவற்றை போற்றும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப் பணியில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின்  வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்  உடன் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ஏற்கெனவே இருந்த  நடைமுறையை எளிமைப்படுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர்களை தொடர்பு அலுவலர்களாக நியமித்தது;  முன்னாள் படைவீரர்களின் மகள் திருமண உதவித்தொகையினை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது;  பல வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்த படைவீரர்களின் வீர தீரச்செயல்கள் மற்றும் போற்றத்தக்க பணிபுரிந்தமைக்கான விருது மற்றும் பதக்கம் பெறுவோருக்கு வழங்கப்படும் பணமுடிப்பு மற்றும் நிலம் வழங்குவதற்குப் பதிலாக வழங்கப்படும் பணப் பயன்கள் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்தியது  போன்ற பல்வேறு நலத்திட்டங்களைத்  தமிழகத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நலன் கருதி  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  செயல்படுத்தி வருகிறார். 

நமது தாய் திருநாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றிய முப்படை வீரர்களைக் கெளரவித்து அவர்கள் தியாகத்தை நினைவுக் கூரத்தக்க வகையில் நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் கொடிநாள் விழாவினையொட்டி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, கல்வி உதவித் தொகை, முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகை, படைப்பணியில் உயிர்துறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு உதவித் தொகை மற்றும் போற்றத்தக்க பணிபுரிந்தமைக்கான பதக்கம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு படைவீரர்களுக்கு உயர்த்தப்பட்ட பணப்பயன்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா சென்னை, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் (பொறுப்பு)   கொடி நாள் நிதிக்கு உண்டியலில்  10 ஆயிரம்  ரூபாய்  வழங்கினார்கள்.  அப்போது தமிழக முதலமைச்சருக்கு கொடிநாள் பேட்ஜ் அணிவிக்கப்பட்டது.  

தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடமிருந்து  மேற்கண்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள்  தமிழக முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். 

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர், பொதுத்துறைச் செயலாளர், பொதுத்துறை இணைச் செயலாளர் மற்றும் அலுவலரால் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு), இணை இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்)  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்