முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யஸ்ரீயின் வாழ்வில் புயலாக வீசிய கணவர் மரணம்

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.22 -​ பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் நேற்று  முன்தினம் மதியம் கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 அப்போது நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் மன அழுத்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-​

பழம்பெரும் கர்நாடக இசைக்கலைஞரான டி.கே. பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீக்கும் மகாதேவனுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நித்யஸ்ரீயின் இல்லற வாழ்க்கை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அமைதியான இசை வெள்ளமாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர்தான் கணவரின் மன அழுத்த நோய் அவரது வாழ்வில் புயல்போல தாக்கத் தொடங்கியது. 

இதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாகவே நித்யஸ்ரீ நிம்மதி இழந்து தவித்து வந்துள்ளார். பல நேரங்களில் மகாதேவன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே பொது இடங்களில் நடந்துள்ளார். அவரது கார் டிரைவரான சுரேசிடம் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. காரில் செல்லும்போது தேவையில்லாமல் கைகளை ஆட்டிக் கொண்டும், சத்தம் போட்டுக் கொண்டும் இருப்பார் என அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

திடீரென காரை நிறுத்தி எந்த இடமாக இருந்தாலும் இறங்கி சிறுநீர் கழிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். டிரைவர் சுரேஷ் தினமும் 8 மணிக்கெல்லாம் மகாதேவனின் வீட்டுக்கு வந்து விடுவார். சபரிமலைக்கு சென்றிருந்ததால் நேற்று காலையில் 11 மணிக்குத்தான் சுரேஷ் சென்றுள்ளார்.

உடனே சுரேசை அழைத்துக் கொண்டு அடையாறு போர்ட் கிளப்புக்கு மகாதேவன் காரில் சென்றுள்ளார். அவரது 2 மகள்களும் அங்கு டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாலையில் பயிற்சி வகுப்பு உள்ளதா? என விசாரித்து விட்டு, காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது டிரைவரை முன் சீட்டில் அமர வைத்து விட்டு மகாதேவன் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

கோட்டூர்புரம் பாலத்தில் வந்ததும் திடீரென காரை நிறுத்தி இறங்கியவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காரை நிறுத்திவிட்டு மகாதேவன் இறங்கியதும், சிறுநீர் கழிக்கத்தான் செல்கிறார் என நினைத்தேன் என்று டிரைவர் சுரேஷ் போலீசில் கூறியுள்ளார்.

மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த மகாதேவன் நித்யஸ்ரீயிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் அவரிடம் விசாரித்தபோது எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி மகாதேவனின் தாய் சாரதா இறந்துள்ளார். இதன் பின்னர் மகாதேவனின் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதற்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தனர்.

இதன் மூலம் மன அழுத்த நோயால் அவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மங்களகரமாக மேடையில் அமர்ந்து தனது வசீகர குரலால் இசை பிரியர்களை கட்டிப்போட்ட நித்யஸ்ரீ தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது கண்களை கலங்கச் செய்தது. 

இந்த நேரத்தில் நித்யஸ்ரீ ஜீன்ஸ் படத்தில் பாடிய 'கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணை விட்டு பிரிவதில்லை.  என்னை விட்டு பிரிவதில்லை' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்