முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் சிசுக்கொலை தேசிய அவமானம் - மன்மோகன்சிங்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.22 - பெண் சிசுக் கொலை இந்த நாட்டில் தொடர்வது ஒரு தேசிய அவமானம் என்று பிரதமர் மன்மோகன்சிங் வேதனையோடு குறிப்பிட்டார். பெண் சிசுக் கொலை என்பது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பெண் பிள்ளைகள் என்றாலே பல பெற்றோர்கள் வெறுக்கிறார்கள். பயப்படுகிறார்கள். காரணம், இன்றைக்கு விற்கப்படும் தங்கத்தின் விலை. இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 16 ஆயிரத்தை தாண்டி விட்டது. கூலி, சேதாரத்தை சேர்த்தால் ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்திற்குத்தான் வாங்க முடியும். ஒரு சாதாரண தொழிலாளியே இன்று 10 பவுன் நகை போட வேண்டும் என்று கேட்கிறான். வங்கி மாப்பிள்ளை, தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்க்கும் என்ஜீனியர் மாப்பிள்ளை என்றால் சொல்லவே வேண்டாம். நூற்றுக்கணக்கில் கேட்பார்கள். ஆந்திராவில் உள்ள வாலிபர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை வரதட்சனையாக கேட்பதாக சொல்கிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் இப்படி ஒரு தகவல் கசிந்துள்ளது. 10 பவுன் போட்டு ஒரு பெண்ணை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றால் ரூ. 2 லட்சம் செலவாகும். பிறகு ரொக்கப் பணம், மண்டபம் என்று ஏராளமான சமாச்சாரங்கள் உள்ளன. இதனால்தானோ என்னவோ, பெண் பிள்ளை பிறந்தாலே பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். 

உசிலம்பட்டி, தருமபுரி போன்ற இடங்களில் பெண் சிசுக் கொலை இப்போதும் கூட நடப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு வேறு பல காரணங்களும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ நம் நாட்டில் பெண்களின் விகிதம் குறைந்து வருகிறது. இந்த நிலைமை நீடித்தால் ஆண்களுக்கு மணப் பெண்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும். பட்டம் படித்த பட்டதாரிகளே தனக்கேற்ற பெண்கள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். நான் அந்த பரிகாரம் செய்தேன். இந்த பரிகாரம் செய்தேன். ஆனால் பெண் கிடைக்கவில்லை என்று பத்திரிக்கைகளுக்கு எழுதி புலம்பித் தள்ளும் வாலிபர்களும் உண்டு. எனவே வருங்காலத்தில் பெண் கிடைக்க வேண்டும் என்றால் பெண் சிசுக் கொலை தடுக்கப்பட வேண்டும். 

இந்த நிலையில் பிரதமரும் இதை குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 

பெண் சிசுக்கொலை என்பது நம் நாட்டில் இன்னமும் நீடிக்கிறது. இது ஒரு தேசிய அவமானமாகும். பெண்கள் தங்களுக்குள்ள தடைகளை எல்லாம் நீக்கி அவற்றை தகர்த்தெறிந்து பல துறைகளிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். ஆனாலும் பெண் சிசுக் கொலை நீடிக்கிறது. இது ஒரு அவமானகரமான செயல். பெண்களின் விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பெண் சமுதாயத்தை நாம் மதிக்க வேண்டும். அவர்களை போற்ற கற்றுக் கொள்ள வேண்டும். வகுப்பறைகளில் மட்டுமல்ல, விளையாட்டு துறை உட்பட பல துறைகளில் நமது பெண்கள் பெருமைப்படும் அளவுக்கு சாதனை புரிகிறார்கள். எல்லா துறையிலும் அவர்கள் மிளிர்கிறார்கள். அப்படிப்பட்ட பெண் சமுதாயத்தை நாம் காக்க வேண்டும். அழிக்க கூடாது. இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்