முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரயில் கட்டண உயர்வா? சரத்குமார் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - ஏற்கனவே ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டு மீண்டும் ரயில்வே பட்ஜெட்டில் கட்டணத்தை உயர்த்துவதா? என்று ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் புதிய தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் பட்ஜெட்டுக்கு முன்பே ஏற்கனவே உயர்த்தி விட்டார்கள். இப்போது தட்கல் கட்டணத்தையும், முன்பதிவு கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது மீண்டும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியது போல் ஆகி விட்டது. கடந்த ஆண்டை விட ரயில்வேக்கு நஷ்டம் அதிகரித்து இந்த ஆண்டு 2012- 2013-ல் ஏறத்தாழ ரூ.24,000 கோடியாக இருக்கும் என்கிறார்கள். ஆண்டுதோறும் நஷ்டம் கூடிக்கொண்டே போகிறது. போதிய நிதி ஆதாரம் இல்லை என்று பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் ரயில்வே துறையின் எதிர்காலம் தான் என்ன? 

சென்னை- விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை உள்பட பல்வேறு ரயில் திட்டங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. கொங்கு மண்டல மக்கள் ஈரோடு- பழனி இடையே புதிய ரயில் பாதை அமைக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதுகுறித்து அறிவிப்பு இல்லை. ஏற்கனவே தொடங்கப்பட்ட ரயில் திட்டங்கள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், புதிய திட்டங்களை எந்த வகையில் செயல்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. 1,52,000 பேருக்கு புதிய வேலை என்று அறிவித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அறிவித்தபடி ஏற்கனவே வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு 1,52,000 பேருக்கு வேலை வழங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்? 

வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் அதிநவீன விரைவு ரயில் திட்டங்களை போல் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. பயணிகள், சரக்குப் போக்குவரத்தில் நம் நாட்டில் முதலிடம் பெறும் ரயில்வேத்துறை உலகின் முன்னணி நாடுகளுக்கு இணையாக ரயில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை பெற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனைகள் பட்ஜெட்டில் இல்லாதது வருத்தமளிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!