முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் வானில் இருந்து ஆயுத மழை: இடதுசாரிகள் கேள்வி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,ஏப். - 30 - மேற்கு வங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் கடந்த 1995 ம் ஆண்டு விமானத்தில் இருந்து மர்மமாக ஆயுதங்கள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து செயல்படாமல் இருப்பது ஏன் என்று இடதுசாரி முன்னணி தலைவர் பீமன்போஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.கடந்த 1995 ம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்தில் இருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. லாட்வியா நாட்டை சேர்ந்த விமானத்தில் இருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரியவந்தது. இந்திய எல்லையை விட்டு வெளியேறிய இந்த விமானம் சில நாட்கள் கழித்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது இந்திய விமானப் படையினர் அந்த விமானத்தை மடக்கி மும்பையில் தரையிறங்க வைத்தனர். அதில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரிட்டனை சேர்ந்த பீட்டர் பிளீச், டென்மார்க்கை சேர்ந்த கிம்டேவி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனந்த மார்க்கம் என்கிற அமைப்பு இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கூறப்பட்டது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட கிம்டேவி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த பணியை செய்ததில் எம்.பி. ஒருவரே தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும் வேலை முடிந்ததும் அவரே தங்களை நேபாள எல்லையில் கொண்டு போய் விட்டதாகவும் கூறினார். மத்திய அரசு இந்தியாவின் ரா உளவு அமைப்பு, பிரிட்டனின் எம்.ஐ. 5 உளவு அமைப்பு ஆகியவற்றுக்கு தெரிந்தே இது நடந்ததாகவும் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராக போராடுவதற்காக மக்களுக்காக ஆயுதம் வழங்கவே விமானத்தில் இருந்து ஆயுதங்கள் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிம்டேவியின் பேட்டியை அடுத்து தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசை சீர்குலைக்கவே மத்திய அரசின் ஆதரவுடன் திட்டமிட்டு இந்த சதி அரங்கேறப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக இடதுசாரி முன்னணி தலைவர் பீமன்போஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். கிம்டேவியின் குற்றச்சாட்டுகளை அரசு வட்டாரங்கள் மறுத்திருக்கின்றன. இந்த வழக்கில் அவரை டென்மார்க்கில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியை தடுக்கவே இது போன்று அபாண்டமான புகார்களை அவர் தெரிவித்திருப்பதாக அரசின் உயர் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்