சென்னை, மே.23 - ஐ.பி.எல். மோசடி ஏற்பட்டுள்ளதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலாகி உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சூதாட்ட வீரர்கள் மற்றும் தரகர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. சூதாட்ட தரகர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஊழல் நிறைந்த ஐ.பி.எல். போட்டியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், ஐ.பி.எல். மற்றும் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒத்தக்கடையை சேர்ந்த சாந்தகுமரேசன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஐ.பி.எல். போட்டிகள் முற்றிலும் வணிக நோக்கம் கொண்டது. பி.சி.சி.ஐ. நடவடிக்கைகளில் எந்த பொதுநலமும் இல்லை. இதனால் அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் எம்.சுந்தரேஷ், மாலா ஆகியோர் இது தொடர்பாக மத்திய அரசு, ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா மற்றும் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அவர்கள் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதேசமயம், ஐ.பி.எல். நிர்வாகத்தை விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கோரி, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.