முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் சிக்கித் தவித்த தமிழர்கள் அனைவரும் மீட்பு

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 30 - உத்தரகாண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கி நேபாள எல்லையில் தவித்த 26 தமிழர்கள் கடைசி கட்டமாக மீட்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அரசு செலவில் அவரவர் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உத்தரகாண்டில் சிக்கித் தவித்த அனைத்து தமிழர்களும் மீட்கப்பட்டு விட்டனர். முதல்வருக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை என்று இவர்கள் உருக்கமாக தெரிவித்தனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் புனித யாத்திரை மேற்கொண்டனர்.

சமீபத்தில் அங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் அவர்களும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்களுடன் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்க தமிழக அரசின் சார்பில் டெல்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையிலான குழுவினர் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தமிழர்கள் பலரும் படிப்படியாக மீட்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர். இதுவரை 500 பேர் மீட்கப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த வைத்யநாதன் சாது பாலானந்தா என்பவர் தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 26 பேர் உத்தரகாண்ட் மாநிலம் அருகே நேபாள எல்லையில் உள்ள ஆதி கைலாஷ் என்ற இடத்துக்குச் சென்றனர்.

சென்னையைச் சேர்ந்த வைத்தியநாதன் சாது பாலானந்தா, டாக்டர் சுவாமிநாதன், டாக்டர் தமிழ்வாணன் சகுந்தலா, வெங்கடேஸ்வரன், சாந்தினி, விஜயா, சங்கர், சீனிவாசன், வினோதினி, ராஜன்பாபு, சோலாட்சி, வேலூரைச் சேர்ந்த ஜான்சி, ஸ்ரீதரன், மாதவன், டாக்டர் அஸ்வானா, மனோன்மணி, சிவ பிரகாசம், ஜனார்த்தன ரெட்டி, கோவையைச் சேர்ந்த சந்திரமதி, திலகவதி, பரமேஸ்வரன் ரமணன், ஒசூரைச் சேர்ந்த தினகரன், யக்னஸ்ரீ, நாமக்கல்லைச் சேர்ந்த முகேஷ்பிரபு, தர்மபுரியைச் சேர்ந்த ஹரி வெங்கடேஷ். இவர்கள் யாத்திரையாகச் சென்றபோது ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் காலா என்ற இடத்தில் மாட்டிக் கொண்டனர். இவர்களைப் பற்றிய விவரம் தெரியாததால் அவர்களது உறவினர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தனர். 

இந் நிலையில் இவர்கள் நேபாள எல்லையில் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்த ஜக்கையன் மற்றும் அதிகாரிகள் உடனே உத்தரகாண்ட் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு 26 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து 26 பேரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் பஸ் மூலம் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.  அங்கு அவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. பின்னர் அங்கிருந்து இந்த 26 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் கூறுகையில், 

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன்படி கடைசி கட்டமாக 26 பேர் மீட்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். கடைசி கட்டமாக மீட்கப்பட்ட 26 பேரும் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். மீட்கப்பட்ட ஒரு பெண்மணி கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. நாங்கள் மறுபிறவி எடுத்துள்ளோம் என்று உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். மீட்கப்பட்ட துறவி ஒருவர் கூறுகையில், நாங்கள் மீட்கப்பட்டு விட்டோம். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். முதல்வருக்கு எங்களது நன்றி என்று தெரிவித்தார். நேற்று மீட்கப்பட்ட 26 பேருடன் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பக்தர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டு விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்