முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. 2-ம் தேதி ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன், 30 -  லாபத்தில் இயங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை  தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், என்.எல். சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும்பட்சத்தில், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கேட்டதற்கு, சாதகமான முடிவு எதையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பிரச்சனை பல்லாண்டு காலமாக நிலவி வருகிறது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 

2004-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் நாட்டின் மின்சாரத் தேவையைப் 

பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கக் கூடியதும், லாபத்தில் இயங்கக் கூடியதுமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதில் குறியாக இருந்து வருகிறது. 2006-ஆம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 

10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த போது, மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  அதனையடுத்து 

மத்திய அரசு தனது முடிவை கைவிட்டது. 

பின்னர், 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்து பதவி ஏற்ற காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு சில நாட்களிலேயே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு எடுத்த போது அதற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தேன்.  பின்னர் மத்திய அரசின் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. 

தற்போது மீண்டும் அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தவுடன், இதற்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெரிவித்ததோடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிப்புகளையும் கோடிட்டுக் காட்டி, இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு பாரதப் பிரதமருக்கு 23.5.2013 அன்று கடிதம் எழுதி இருந்தேன்.  இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று பாரதப் பிரதமர் அவர்கள் 8.6.2013 அன்று எனக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். 

இந்தச் சூழ்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ள தகவல் எனக்கு கிடைக்கப் பெற்றவுடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22.6.2013 அன்று பாரதப் பிரதமருக்கு நான் மீண்டும் கடிதம் எழுதினேன்.  அந்தக் கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவு தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழக மக்களின் மனதில் கவலையையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது என்று நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.  

அதனையடுத்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து பொதுத் துறை நிறுவனமாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் கவலையைப் போக்கும் வகையிலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் 25.6.2013 அன்று பாரதப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நான் தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.  இது குறித்து எவ்வித சாதகமான முடிவினையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை.  இதற்கிடையில், நெய்வேலி பங்கு விற்பனை உறுதி என்று  மத்திய நிலக்கரி துறை அமைச்சர் திரு. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. 

இந்தப் பிரச்சனை குறித்து முதலில் ஓர் அறிக்கை விடுத்த தி.மு.க. தலைவர் 

திரு. கருணாநிதி, 'கனி'மொழிக்கு பதவி கிடைத்ததும் நிலக்'கரி'யை மறந்துவிட்டார். 

இந்தப் பிரச்சனை குறித்து சாதகமான முடிவினை மத்திய அரசு தெரிவிக்காவிட்டால், 3.7.2013-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

எனவே, லாபத்தில் இயங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை  தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும்; பங்குகளை விற்கும்பட்சத்தில், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கேட்டதற்கு, சாதகமான முடிவு எதையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2.7.2013 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில், அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.   

 

மாவட்ட வாரியாக நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.  இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.  மேலும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட மத்திய அரசு அலுவலகம் முன்பு நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும்.

தொழிலாளர்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழக உடன்பிறப்புகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago