முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசன் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும்: ஐகோர்ட்டு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 சென்னை, ஜூலை. 5 - மரணமடைந்த இளவரசனின் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் ரமேஷ் என்பவர் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஜாதி, வேற்றுமை காரணமாக இளவரசன் சாக நேரிட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இந்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். பிரேத பரிசோதனையின் போது இளவரசன் குடும்பத்தினர் விருப்பப்படும் மருத்துவர் மற்றும் ஒருவர் அருகில் இருக்க வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ படம் எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன், சி.பி.செல்வம் ஆகியோர் அரசு குற்றவியல் தலைமை வக்கீல் சண்முக வேலாயுதத்திடம் இந்த மனு மீது உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா என்று கேட்டனர். அதற்கு சண்முக வேலாயுதம் கூறும் போது, பிரேத பரிசோதனை நடந்து முடிந்து விட்டது. பரிசோதனை முழுவதும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கோர்ட்டில் மனு இப்போது தேவையற்றது. தேவைப்பட்டால் வீடியோ படத்தை பார்த்து சந்தேகம் வந்தால் கோர்ட்டை அவர்கள் நாடலாம் என்றார்.

மனுதாரரின் வக்கீல் சங்கரசுப்பு கூறியதாவது:-

இன்று காலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது பிரேத பரிசோதனை சம்பந்தமாக மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். எனவே பிரேத பரிசோதனையை தாமதப்படுத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் பகல் 11.30 மணி வரை பிரேத பரிசோதனை செய்யமாட்டோம் என்று உறுதியளித்தார். ஆனால் இப்போது பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத்தான் நினைக்கிறார்கள். உண்மை நிலை குறித்து விசாரணை நடத்த விரும்பவில்லை என்றார். உடனே நீதிபதிகள் எப்போது பிரேத பரிசோதனை முடிவடைந்தது என்று கேட்டனர்.

அதற்கு வக்கீல் சண்முக வேலாயுதம் கூறியதாவது, இளவரசன் குடும்பத்தினரின் அனுமதி பெற்று காலை 7 மணியில் இருந்து 11 மணி வரை பிரேத பரிசோதனை நடந்துள்ளது என்றார். அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கை வீடியோ காட்சிகள் அனைத்தும் உடனடியாக இளவரசன் தந்தைக்கு வழங்கப்பட வேண்டும். மறு பரிசோதனை தேவைப்படுமேயானால் அதற்கு வசதியாக இளவரசன் உடலை பதப்படுத்தி மருத்துவ மனையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்