முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசன் மரணம்: நீதிபதி தலைமையில் விசாரணை: முதல்வர்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.9 - தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து உண்மை நிலை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இளவரசன் மரணம் குறித்து அவரது தந்தை சந்தேகங்களை எழுப்பி இருப்பதாலும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இருப்பதை அடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெள்ளம் வருமுன்னே அணை கோல வேண்டும்  என்ற பழமொழிக்கேற்ப சாதி, மத மோதல்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதிலும், அவ்வாறு ஏற்படின் முளையிலேயே கிள்ளி எறி என்பதற்கேற்ப உடனுக்குடன் அவற்றைக் களைவதிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக எனது தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் மற்றும் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டதையடுத்து, மணமகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதன் விளைவாக, 7.11.2012 அன்று இருவேறு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டு, நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன, தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் எனது அரசால் வழங்கப்பட்டன.  பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் நிரந்தர தங்குமிடமும் கட்டிக் கொடுக்கப்பட்டது.  மேலும் அவர்களுக்கு உடைகள், சமையல் பாத்திரங்கள், போர்வைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.  புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.  மாணவ மாணவியருக்குத் தேவையான புதிய நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டன.  பாதிக்கப்பட்ட 326 ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாய் என 1 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.  மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணமாக 7 கோடியே 32 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கென 99 பசுமை வீடுகள் கட்டித்தர 

2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுவாழ்வுப் பணிகளை எனது தலைமையிலான அரசு உடனடியாக மேற்கொண்டதன் காரணமாகவும், எனது அரசின் உத்தரவின் பேரில் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பியது.  

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில், வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்புகார்கள் அனைத்தும் மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டன.  இத்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதற்கிடையில், திவ்யாவின் தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திவ்யாவை தனது தாயாருடன் தங்க அனுமதித்தது. திவ்யாவின் தாயார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவும் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், கலப்புத் திருமணம் செய்து கொண்ட வாலிபர் இளவரசன், தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறத்தில் உள்ள ரயில்வே இருப்புப் பாதையில் 4.7.2013 அன்று இறந்த நிலையில் காணப்பட்டார். மிகுந்த மன வேதனையும் அதிர்ச்சியும் அளித்துள்ள இளவரசன் இறப்பு குறித்து பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.  சமூக ஆர்வலர்களும், தனி நபர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.  இறந்த  இளவரசனின் தந்தை அவரது இறப்பில் சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.  எனவே  இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிங்காரவேலுவின் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்