முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வந்த ஜனாதிபதியை முதல்வர் வரவேற்றார்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.25 - தென்மாநிலங்களில் 3 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

3 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கர்நாடகாவில் இருந்து தனி விமானத்தில் நேற்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் நேரில் சென்று முதல் அமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார். விமான நிலையத்தில் கவர்னர் ரோசைய்யா, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கேபி.முனுசாமி, வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன் மேயர் சைதை துரைசாமி மற்றும் முப்படை தளபதிகள், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ், தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பு முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி புறப்பட்டார். அங்கு சிறிது ஓய்வு எடுத்த பின்னர், அவரும், கவர்னர் ரோசைய்யாவும் கவர்னர் மாளிகையில் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்தார். சாலையின் இரு ஓரங்களிலும் மக்கள் கூட்டம் உற்சாக வரவேற்பு அளித்தது. 

முன்னதாக முதல்வர் ஜெயலலிதா நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்தார். அவருக்கும் சாலையின் இரு புறத்திலும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். மேள வாத்தியங்களும் முழங்கின.

நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கல்யாண் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

பின்னர் விழா துங்கியது. 

விழா நிகழ்ச்சி முடிந்ததும் காரில் கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி நேற்று இரவு அங்கு தங்கினார்.

இன்று காலை 9.30 மணி அளவில் விமான நிலையம் செல்லும் பிரணாப் முகர்ஜி ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார். அங்கு புதுவை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வருகிறார். இதன்பிறகு தனி விமானம் மூலம் பிரணாப் முகர்ஜி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை மற்றும் புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி வரையிலும், பின்னர் கிண்டியிலிருந்து விழா நடந்த நேரு உள்விளையாட்டு அரங்கம் வரையிலும், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் போலீஸ் ஒத்திகையும் நடந்தது. அப்போது போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுன. ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருந்தனர். ஜனாதிபதி பயணிக்க குண்டு துளைக்கமுடியாத காரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாவையொட்டி சென்னை விமான நிலையம் நேரு உள் விளையாட்டு அரங்கம், கவர்னர் மாளிகை ஆகிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்ளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்