முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு விழா: குடிபோதையில் ஓட்டினால் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - சென்னையில்புத்தாண்டு விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். மதுவிருந்து, நடனத்துக்கு கட்டுப்பாடு விதித்ததோடு குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போலீசார் கூறியுள்ளனர்.

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்ட தொடங்கி உள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்து விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அதேபோல் புத்தாண்டு தினத்தில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி செல்வதால் விபத்துக்களும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. இதனை கட்டுப்படுத்துவதற்கும், நட்சத்திர ஓட்டல்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நட்சத்திர ஓட்டல், மற்றும் பண்ணை வீடுகளில் அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட வேண்டும் என்றும், குடிபோதையில் இருப்பவர்கள் கார் ஓட்டுவதற்கு ஓட்டல் நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாற்று டிரைவர்களை வைத்து அவர்கள் வீடுகளில் கொண்டு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அங்கேயே தங்க வைத்து மறுநாள் காலையில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

சென்னையை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் ஆபாச நடனங்களுக்கு போலீசார் தடை விதிப்பது வழக்கம். ஆனால் அதையெல்லாம் மீறி நட்சத்திர ஓட்டல்களில் ஆண்டுதோறும் தனி அறையில் ஆபாச நடனங்கள், குத்தாட்டங்கள் களை கட்டும் இதற்காக ஓட்டல் நிர்வாகத்தினர் பெரிய தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்கூட்டியே கறந்து விடுவார்கள்.

அதேபோல ஜோடியாக நடனமாடுவதற்கும் நட்சத்திர ஓட்டல்களில் தனியாக இடம் ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஜோடியின்றி தனியாக செல்பவர்கள் நடனமாட முடியாது. ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் நள்ளிரவில் ஒருசில வாலிபர்கள் நடனமாடும் ஜோடிகள் கூட்டத்துக்குள் நுழைய முற்படுவார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு திடகாத்திரமான பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 60 பண்ணை வீடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக காட்டி வருகிறார்கள். போலீஸ் அனுமதியின்றி பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பண்ணை வீடு அதிபர்கள் பட்டியலை சேகரித்த போலீசார் அவர்களையும் தனியாக அழைத்து பேசி உள்ளனர்.

அதே நேரத்தில் பண்ணை வீடுகள் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 31_ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வாலிபர்கள் பறப்பார்கள். அதனை கட்டுப்படுத்த ஆங்காங்கே சாலை தடுப்புகளை வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போதையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே மது போதையில் இருப்பவர்கள் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர். போதையில் பிடிபட்டால் புத்தாண்டு காரணமாக கொண்டு தப்பிக்க முடியாது என்றும் நடவடிக்கை உறுதி என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக் கண்ணன், ராஜேஸ்தாஸ், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் தினகரன், அருண் ஆகியோர் மேற்பார்வையில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 50_க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 31_ந்தேதி இரவு முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்