முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முதல்வர் விவசாயத்துறையில் நல்ல மாற்றங்களை கொண்டுவர உள்ளார் செங்கோட்டையன் பேட்டி

திங்கட்கிழமை, 30 மே 2011      தமிழகம்
Image Unavailable

ஈரோடு, மே - 30 - தமிழக முதல்வர் விவசாயத்துறையில் நல்ல பல மாற்றங்களை கொண்டுவர உள்ளார் என்று விவசாயத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நிருபர்களிடம் தெரிவித்தார். தமிழக விவசாயத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரில் சென்று அரசு பணிகளை ஆய்வு செய்தார். ஈரோடு அருகே உள்ள சென்னம்பட்டியில் பயிரிடப்பட்டுள்ள மலைவேம்பு மரங்களை அவர் பார்வையிட்டார். மலைவேம்பு மூலம் பேப்பர், தீக்குச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மின்சாரம் தயாரிக்கலாமா என்பது குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பிறகு பெருந்துறை அருகேயுள்ள மஞ்சள் வணிக வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் விவசாயத்துறையில் பல நல்ல மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார். பொதுமக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறையை கேட்டு அறிய உத்தரவிட்டுள்ளார். அதன்படி நான் நேரில் பல இடங்களுக்கு சென்று குறைகளை கேட்டு வருகிறேன். விவசாய பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள் கட்ட நடவடிக்கை எடுக்கும் பணி செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி முதல்வர் ஜூன் 6 ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார். விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான அளவு விதை-உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு பலர் சென்றுவிடுவதால் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என குறை எழுந்துள்ளது. இதை முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.
பெருந்துறையில் கட்டப்பட்டு வரும் மஞ்சள் சேமிப்பு குடோனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சாய கழிவுகளை முள் செடிகள் மூலம் அகற்றப்படும் பணிகளை ஆய்வு செய்தார். அமைச்சருடன் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாசலம், ரமணிதரன், பி.ஜி.நாராயணன் மற்றும் ஈரோடு கலெக்டர் காமராஜ் மற்றும் பலர் உடன் சென்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்