முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, ஜூன் 15 - நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை மாவட்ட ஆட்சி தலைவர் சி.நடராசன் நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஆண்டு தோறும் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் நடராசன் காலை 11 மணிக்கு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மூலம் தாமிரபரணி பாசன அமைப்பின் கீழுள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்கள் மூலம் 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். தண்ணீர் இன்னும் 120 நாட்களுக்கு 3015 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் தண்ணீரை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்தி விவசாய உற்பத்தியினை அதிகரித்து, தங்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் நடராசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில்  அம்பை ஒன்றிய அதிமுக செயலாளர் தாயப்பராஜா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் (தாமிரபரணி வடிநில வட்டம்) பாஸ்கல்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநில கோட்டம்) காமராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தேவசகாயம், உதவி பொறியாளர் ராமையா, அம்பை தாசில்தார் சுப்பிரமணியன்,தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சந்தோஷ்குமார்,  உதவி செயற்பொறியாளர்கள் சுடலையாண்டி, ராஜா, வேளாண்மைதுறை துணை இயக்குநர் அழகிரிசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர் நவாஸ்கான், அண்பை ஒன்றிய துணை சேர்மன் சிவகுருநாதன், ஒன்றிய இளம்பெண்கள், ஆண்கள் பாசறை மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 59.90 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 75.39 அடியாகவும் இருந்தது. தற்போது மலைப்பகுதியில் நல்ல சாரல் மழை பெய்து வருவதால் அமைகளின் நீர்மட்டம் உயர அதிகவாய்ப்புள்ளது. தற்போது நீர்வரத்து 2372 கனஅடியாக உள்ளது. 13 மி.மீ மழை பெய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony