முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிபொருட்கள் விலையை அடிக்கடி உயர்த்துவதா? மம்தாபானர்ஜி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன். - 26 - எரிபொருட்கள் விலையை அடிக்கடி உயர்த்துவதை எங்களால் ஆதரிக்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.  சமையல் கேஸ், டீசல் மற்றும் ரேசனில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு நேற்று முன்தினம் தாறுமாறாக உயர்த்தியது. இவற்றில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அளவுக்கதிகமாக அதாவது , ஒரு சிலிண்டருக்கு ரூ. 50 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு ரூ. 3 வீதமும், மண்ணெண்ணெய் ரூ. 2 வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த போது அந்த கூட்டத்திலேயே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் மம்தா பானர்ஜி. ஆனால் அதையும் மீறி விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த விலை உயர்வு பாமர மக்களை கடுமையான இன்னலுக்கு ஆளாக்கும். எரிபொருள் விலையை அடிக்கடி உயர்த்துவதை எங்களால் ஆதரிக்க முடியாது.
இதை சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் சொல்லி விட்டோம். ஆனாலும் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கனவே எரிபொருட்கள் விலை அதிகமாக உள்ளது. இப்போது மீண்டும் பாமர மக்கள் பயன்படுத்தும் இந்த பொருட்களின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கனவே பெட்ரோல் விலையையும் உயர்த்தி விட்டார்கள். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
பாரதீய ஜனதா மேலிட பிரதிநிதி நிர்மலா சீதாராமன் கூறுகையில், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்தியிருப்பது மனிதாபிமானமற்ற ஒரு நடவடிக்கை. இந்தியாவின் வளர்ச்சியை இந்த விலை உயர்வு பாதிக்கும். நாடு முழுவதும் இதை எதிர்த்து நாளை(இன்று) எங்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார். இந்த விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் மாவட்ட அளவில் இருந்து தேசிய அளவில் பாரதீய ஜனதா எதிர்ப்பு போராட்டங்களை நடத்தும் என்று நிதின் கட்காரி அறிவித்ததாக பா.ஜ.க துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வியும் அறிவித்தார்.
எண்ணெய் மாபியா கும்பலின் நலனை பாதுகாக்கவே அரசு இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது என்றும் நக்வி தெரிவித்தார். இந்த விலை உயர்வை அறிவித்து எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்கள் என்றும் நக்வி ஆவேசமாக தெரிவித்தார். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல். அரசு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமனும் தெரிவித்தார். இடதுசாரி கட்சிகளும் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். வரிகள் குறைப்பும் போதுமானதாக இல்லை என்று இ. கம்யூனிஸ்டு பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி தெரிவித்தார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இந்த விலை உயர்வுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களால் இதை தாங்கவும் முடியாது. எனவே இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். இந்த விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஆக, டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை நாட்டின் எதிர்க்கட்சிகளும் சரி, காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் சரி மிக கடுமையாக கண்டித்துள்ளன. காரணம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து 10 முறைக்கும் மேலாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லாரி அதிபர்கள் பல முறை போராட்டம் நடத்தியும் கூட மத்திய அரசு அதை பொருட்படுத்தாமல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. அனேகமாக லாரி உரிமையாளர்கள் மீண்டும் நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக் நடத்தினாலும் ஆச்சரியமில்லை. மத்திய அரசின் இந்த விலை உயர்வு முடிவால் விலைவாசி மேலும் உயரும். அப்போது பொதுமக்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.    
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்