முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லா உமர் உயிரோடு இருப்பதாக தகவல்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை 21 - அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தலிபான் தலைவர் முல்லா உமர் உயிரோடு இருக்கிறார் என்று தலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 ம் ஆண்டுமுதல் 2001 ம் ஆண்டுவரை தலிபான் இயக்கத்திற்கு முல்லா உமர் என்பவர் தலைமைவகித்து வந்தார். இவரது தலைமையின்கீழ் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்தபோது இஸ்லாமியப் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கடந்த 2001 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தலைவர் பின் லேடனை ஒழிப்பதற்காக அந்நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்த முல்லா உமரும், ஒசாமா பின்லேடனும் பாகிஸ்தானுக்கு தப்பியோடினர். பாகிஸ்தானில் இருந்தபடியே இவர்கள் இருவரும் அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சமீபத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தலிபான் தலைவர் முல்லா உமர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் முல்லா உமர் உயிரோடு இருப்பதாக இப்போது புதிய செய்திகள் கிடைத்துள்ளன. தங்களது போனை இடைமறித்து அதில் தலிபான் தலைவர் முல்லா உமர் இறந்துவிட்டதாக தலிபான்களே ஒப்புக்கொள்ளும் வகையில் அமெரிக்கா தொழில்நுட்ப முறையை கையாண்டுள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் முல்லா உமர் இறக்கவில்லை என்றும், அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும் அந்த செய்தி தொடர்பாளர் கூறியதாக செய்தி ஸ்தாபனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

முல்லா உமர் கொல்லப்பட்டதாக கூறப்படும் அமெரிக்காவின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எங்களது செல்போன்களை இடைமறித்து முல்லா உமர் கொல்லப்பட்டதாக தலிபான்களை அமெரிக்கா நம்பவைத்துள்ளது என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார். அமெரிக்காவின் தகவல் பொய்யானது. ஆப்கானிஸ்தான் மக்களை சமாதானப் படுத்துவதற்காக அமெரிக்கா இப்படி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் உண்மையில் முல்லா உமர் சாகவில்லை. அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் குவாரி யூசுப் அஹமதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!