முக்கிய செய்திகள்

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.26 - உலகில் மிகவும் சக்திவாய்ந்த 7-வது பெண்மணியாக சோனியா காந்தியை பிரபல போர்பீஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல போர்பீஸ் என்ற பத்திரிகை ஆண்டு தோறும் உலகின் மிகச்சிறந்த தலைவர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலை இந்த பத்திரிகை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான 64-வயது சோனியா காந்தி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஆஞ்சலா மெர்கில் முதல் இடத்தையும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்சல் 8-வது இடத்தை பிடித்துள்ளார். பிரேசில் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள தில்மா ரூசப் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அமெரிக்கரான பெப்சிகோ கம்பெனியின் பெண் தொழில் அதிபர் இந்திரா நூயி 4-வது இடத்தையும் பேஸ்புக் இணையதளத்தின்  தலைமை இயக்க அதிகாரி ஷெரீல் சேண்ட் பெர்க் 5-வது இடத்தையும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவரும் பில்கேட்சின் மனைவியுமான மெலிண்டா 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி  சந்திரா கோச்சார் 43-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: