முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் விபத்துக்குள்ளானது

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

கொச்சி, ஆக.- 30 - கொச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையில் வந்து இறங்கிய ஒரு விமானம் அந்த ஓடுபாதையில் இருந்து விலகி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் படுகாயம்  அடைந்தனர். சவுதி அரேபியாவில் இருந்து 137 பயணிகளுடன் கல்ப் ஏர் விமானம் ஒன்று நேற்று அதிகாலை 3.50 மணிக்கு  கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியது. ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் திடீரென விலகி ஓடுபாதைக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் மோதி நின்றது. அதன் மூக்குப் பகுதியில் உள்ள சக்கரம் கழன்று ஓடிவிட்டது. மேலும் விமானத்தின் மூக்கு பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசர கதவுகளை திறந்து வெளியே குதித்து உயிர்தப்பினர். அப்போது 2 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஓடுபாதையில் இருந்து 700 மீட்டர் தூரத்திற்கு விமானம் விலகிச் சென்றுள்ளது. ஆனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடுமையான மழை, பலத்த காற்று ஆகியவற்றின் காரணமாக இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது என்று இந்த விமான நிலையத்தின் தலைமை அதிகாரி குரியன் தெரிவித்தார். இந்த விமானத்தை ஓடுபாதைக்கு கொண்டு வர கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து 2 மிகப்பெரிய கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் ராட்சத கிரேன் ஒன்றும் வந்துகொண்டிருப்பதாக குரியன் மேலும் தெரிவித்தார். மேலும் இந்த விமானத்தை ஓடுபாதையில் நிறுத்த ரயில்வே துறையின் உதவியும் நாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விமானத்திற்கு பதிலாக மும்பையில் இருந்து கல்ப் ஏர் நிறுவனம் வேறு ஒரு விமானத்தை கொச்சிக்கு அனுப்பி வைத்துள்ளது. விமானத்தை தரையிறக்கும்போது ஏதோ திரைபோன்று மறைத்ததால் ஓடுபாதை சரிவர தெரியவில்லை என்று விபத்துக்குள்ளான விமானத்தின் பைலட் தெரிவித்தார். இந்த விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலானோர் சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்