முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி இடைத் தேர்தல்: பரஞ்சோதி வேட்பு மனுத் தாக்கல்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி: திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் மிக எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு போட்டி கடுமையாகியுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரான மரியம் பிச்சை விபத்தில் பலியானதால் இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இடத்துக்கு தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை, குறிப்பாக மரியம் பிச்சையின் மகனைத் தான் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்துவார் என அந்தக் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், பரஞ்சோதிக்கு வாய்ப்பு தரப்பட்டதால், மரியம் பிச்சை ஆதரவாளர்கள் எரிச்சலில் உள்ளனர். அதே நேரத்தில், முஸ்லீம்கள் மிக அதிகமாக வசிக்கும் இந்தத் தொகுதியில் மரியம் பிச்சை குடும்பத்தினருக்கு வாய்ப்பு தரப்படாவிட்டாலும், இன்னொரு சிறுபான்மையின வேட்பாளரை ஜெயலலிதா நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், முஸ்லீ்ம் வேட்பாளரை நிறுத்தாததால் இந்தத் தொகுதியின் சிறுபான்மையினர் மத்தியில் கோபம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை தோற்கடித்தது. இதில் கணிசமான வாக்குகள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவுக்குக் கிடைத்த சிறுபான்மையினர் வாக்குகள் ஆகும்.

இந் நிலையில், சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்களை அனுப்பி வைத்ததற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகச் செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், நாங்கள் அதிமுக கூட்டணியில் நீடித்தாலும் கூட நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தந்ததாலும் பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததாலும், எங்களது சமுதாயத்தினர் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளனர் என்பது நிச்சயமான உண்மை. அதே போல இந்தத் தொகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்டுப் பார்த்தோம். அதையும் அவர்கள் ஏற்கவில்லை. இ்ப்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்சோதி மீது தனிப்பட்ட முறையில் ஏராளமான புகார்கள் உள்ளன (அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது இரண்டாவது மனைவி புகார் கூறியுள்ளார்).

 

இதனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையான வசிக்கும் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் நேரு வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை என்றார். கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியே, திமுக வெற்றி பெற்றால் ஆச்சரியமில்லை என்று கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தத் தொகுதியில் அமைச்சராக இருந்தபோது பல நலத் திட்டங்களை நிறைவேற்றியதாலும், தன் மீதான வழக்குகளும் கைது நடவடிக்கையும் பழி வாங்கும் செயலாக மக்களால் பார்க்கப்படுவதாகவும் கே.என்.நேரு நினைக்கிறார்.

இதனால் தனது சமூதாயத்தைச் சேர்ந்த முத்தரையர்களும், முஸ்லீம் ஓட்டுக்களும் தன்னை கரையேற்றிவிடும் என நேரு தரப்பு நம்புகிறது. நேருவின் ஜாமீன் மனு மீது நாளை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இதில் ஜாமீனில் கிடைத்தால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வெள்ளிக்கிழமை நேருவே நேரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இங்கு ஜாமீன் கிடைக்காவிட்டால், தேர்தல் தேதிக்கு கடைசி 5 நாட்கள் முன் ஜாமீனில் வந்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலும் நேரு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், திமுக என்ன தான் செய்தாலும் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்காது என அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் திருச்சி நகரச் செயலாளர் ஜெரோம் ஆரேக்கியராஜ் கூறுகையில், நில மோசடி வழக்குகளில் சிக்கித் தவிக்கும் திமுக வேட்பாளருக்கு இங்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட்ட திமுகவுக்கு இந்தத் தொகுதியில் ஒரு காங்கிரஸ் ஓட்டுக் கூட கிடைக்காது என்றார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இந்திரஜித் கூறுகையில், அதிமுக முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தாததால் சில இஸ்லாமியர்கள் கோபத்தில் திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்காது. இதனால் திமுக வெல்லாது என்றார். இந் நிலையில் திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை கவனிக்க தேர்தல் பணிக் குழுவை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (கழகப் பொருளாளர்),

 

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), அமைச்சர் என்.ஆர். சிவபதி (திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

 

கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

 

இந் நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி இன்று திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அருள்ஜோதி என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலின்போது அமைச்சர் சிவபதி, குமார் எம்பி மற்றும் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்