முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி கூட்டத்தில் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆவேச பேச்சு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி-செப் - 28 - திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும் போட்டியிடுகின்றனர். தேர்தல்களத்தில் மொத்தம் 25பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இதில் 8பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்பொழுது 17 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனிடையே முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பணிக்குழுக்களை அமைத்துள்ளார். இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன்,  நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிகம், கே.பி.முனுசாமி, ரமணா, முகமது ஜான், செந்தில்பாலாஜி, செல்லூர் ராஜூ, உதயகுமார், கோகுலஇந்திரா,  வைகைசெல்வன் எம்.எல்.ஏ ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க செயல்வீரர்கள், செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு என்.ஆர்.சிவபதி அமைச்சர் தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செந்தில்பாலாஜி, செல்லூர் ராஜூ, உதயகுமார், கோகுலஇந்திரா, வேட்பாளர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ ஆகியோர் உட்பட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து பேசியதாவது. இந்த தேர்தல் களத்தில் யாரும் நம்மை வீழ்த்த முடியாது. கடந்த தி.மு.க ஆட்சியின் போது திருமங்கலம் பார்முலாவை கடைபிடித்தார்கள். நம்மை பொறுத்த வரை ஜெயலலிதா பார்முலாவை பின்பற்றினாலே இந்த தேர்தலில் இமாலய வெற்றியை பெற முடியும். ஜெயலலிதா பார்முலா என்றால் கடந்த நான்கு மாத தமிழக அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள், மிக்ஸி, கிரைண்டர், பேன், தங்கத்தாலி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுவருகிறது. இவைகளை எல்லாம் மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது அ.தி.மு.கவின் கடமை.
அதோடு இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் யார் போட்டியிடுகிறார் என்பதை வாக்காளர்களிடம் சொல்ல வேண்டும் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கே.என்.நேரு செய்த ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து அவரது குடும்பத்தினரின் சொத்து சேர்த்தது, நேரு செய்த கட்டப்பஞ்சாயத்து அதன் மூலம் நிலங்கள், கட்டிடங்கள் வாங்கி குவித்தது இது போன்ற விசயங்களை வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இந்த தேர்தலை பொறுத்த வரை நேருவுக்கு கடைசி தேர்தலா இருக்க வேண்டும். அவரது அரசியல் சாம்ராஜ்ஜியத்திற்கு சமாதி கட்ட வேண்டும். இனி அவரது காலம் முழுவதும் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய அத்தியாயத்தை திருச்சி மக்கள் உருவாக்கி தரும் வகையில் பாடம் புகட்ட அ.தி.மு.க வினர் கடுமையாக பாடுபடவேண்டும். இவ்வாறு அமைச்சர் வைத்தியலிங்கம் பேசினார்.
கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து திறந்த ஜீப்பில் திருச்சி ஜங்கசன், மத்திய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, உதயகுமார், என்ஆர்.சிவபதி, கோகுல இந்திரா, செந்தில்பாலாஜி ஆகியோர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர். தொடர்ந்து அமைச்சர்கள் திருச்சியில்  முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்