முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் ஆந்திர முதல்வரிடம் பெற்றோர்கள் கோரிக்கை

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், அக். - 15 - தனித் தெலுங்கானா போராட்டம் காரணமாக அங்கு மூடியிருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.  தெலுங்கானா போராட்டங்களினால் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஒரு மாத காலமாக மூடிக் கிடக்கின்றன. தசரா விடுமுறைக்குப் பின் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுமுறை முடிந்து சில நாட்கள் ஆன பிறகும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இதையடுத்து பெற்றோர் சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பள்ளிகளையும், கல்லூரிகளையும் உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போராட்டங்களில் இருந்து கல்வி நிறுவனங்கள் விலக்கி வைக்கப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடக் கூடாது என்று முதல்வரிடம் அவர்கள் கவலை தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய முதல்வர் பள்ளிகளை திறக்க தேவையான நடவடிக்கைகளை அரசு விரைவில் எடுக்கும். அதனால் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், போராட்டத்தில் மருந்துக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை பங்கு பெறவில்லை. அவையெல்லாம் எந்த தடையும் இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கல்வி நிறுவனங்களை மூட வேண்டும் என்று மட்டும் ஏன் நிர்பந்திக்கிறார்கள். வரும் 15 ம் தேதி தெலுங்கானாவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகும் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு போராட்டம் நடத்துவோர் அனுமதிக்கவில்லை என்றால் மேல்நடவடிக்கை எடுப்பது பற்றி நாங்கள் முடிவெடுப்போம் என்றனர்.  மேலும் உரிய பாதுகாப்பு அளிக்கிறோம் என்று பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு போலீசார் உறுதியளித்த பின்னரும் அவை திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் நாளை பள்ளி செயல்படாது என்று எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்தவண்ணம் இருக்கிறது. இதனிடையே பள்ளி, கல்லூரிகளுக்கு கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கோதண்டராம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுவது குறித்து கருத்து தெரிவித்த ஏ.டி.ஜி.பி. அப்படி எச்சரிக்கப்பட்டதாக நிர்வாகத்தினர் யாரும் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்