முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.பி.பி.சாமி தம்பி மனைவி மீது கொலை வழக்கு பதிவு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக். 21 -​கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, திருவொற்றியூரில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மகன்கள், தம்பி மனைவி மற்றும் அவரது மகன்கள் தாக்கியதில் அ.தி.மு.க. பிரமுகர் மோகன் பலியான சம்பவத்தில் கே.பி.பி.சாமியின் தம்பி மனைவியின் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் 7 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:- 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-​ந்தேதி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. எர்ணாவூர் கே.வி.கே. குப்பம் 5​வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கே.பி.பி. சாமியின் தம்பி கே.பி.பி.சங்கர், அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன், ஆகியோர் போட்டியிட்டனர்.திருவொற்றியூரில் 2 மீனவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த சங்கர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் பணிகளை அவரது மனைவி கஸ்தூரி செய்து வந்தார். வாக்குப்பதிவு நடைபெற்ற கடந்த 17-​ந்தேதி அன்று மாலை எர்ணாவூர் சகாயமாதா பள்ளி அருகே பயங்கர மோதல் வெடித்தது. கே.வி.கே. குப்பம் கிராம தலைவர் அஞ்சப்பனின் தம்பியும், அ.தி.மு.க. பிரமுகருமான செல்வமணி, அவரது மனைவி வெண்ணிலா ஆகியோர், சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டனர். அ.தி.மு.க. தொண்டர் மோகன் (35) என்பவரும் இரும்பு பைப்பால் தாக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் மோகன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  கடந்த 3 நாட்களாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து எண்ணூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கே.பி.பி. சாமியின் மகன் இனியவன், உதவியாளர் நாகேஸ்வரன் உள்பட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.  கே.பி.பி. சாமியின் தம்பி சங்கரின் மனைவி கஸ்தூரி கே.பி.பி.சாமியின் இன்னொரு மகன் பரத் பிரபாகர் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். மோகன் பலியானதை தொடர்ந்து தனியாக கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் கஸ்தூரி உள்பட 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில் மோகன் கொலை தொடர்பாக மேலும் 7 பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தை சேர்ந்த ரமேஷ், மதுரை முத்து, ராஜேந்திரன், விக்னேஷ், தியாகராஜன், நாகூரான், ஜீவஜோதி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான மோதலில் அ.தி.மு.க. தொண்டர் பலியான சம்பவம் எர்ணாவூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony