முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்க முதல்வர் மம்தா மீது மத்திய அமைச்சர் பாய்ச்சல்

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 7- பெட்ரோல் விலை உயர்வை அப்போது எதிர்க்காத மம்தா பானர்ஜி இப்போது எதிர்ப்பது  ஏன்? என்று மத்திய அமைச்சர் ஒருவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தி இந்திய எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு செய்துள்ளன. இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்குவந்து விட்டது. இதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு  விலை  உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரி வருகின்றன. இதே கருத்தை மேற்கு வங்க முதல்வரும்  திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் வெளிப்படுத்தியுள்ளார். பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்  மம்தாவின் இந்த மிரட்டல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார்.

ஏற்கனவே மம்தா பானர்ஜி மத்திய அமைச்சராக இருந்தபோது கூட பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டிருந்த மம்தா பானர்ஜி, இப்போது மட்டும் கண்டனம் தெரிவிப்பதும் மிரட்டல் விடுப்பதும் ஏன்? என்று  அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பா.ஜ.க . போன்ற எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே தவிர வேறொன்றும் இல்லை என்றும் அதே வகையில்தான் மம்தா பானர்ஜியும் மிரட்டல் விடுத்திருக்கிறார் என்றும் அவர் கூறினார். கச்சா எண்ணை விலையும் அமெரிக்க டாலர் மதிப்பும் தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும்  அதனால் பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்றும் அந்த அமைச்சர் மேலும் கூறினார்.

அமெரிக்காவின் பொருளாதார நிலை வேண்டுமானால் சற்று கவலைக்குரியதாக இருக்கலாமே தவிர கச்சா எண்ணை விலையும் அமெரிக்க டாலர் மதிப்பும் ஸ்திரமாகவும் பலமாகவும் உள்ளன என்றும் அவர் கூறினார். பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தனது  கட்டுப்பாட்டை  விலக்கி கொண்டபோது  மத்திய அமைச்சராக இருந்தவர்தான் மம்தா பானர்ஜி. ஆனால் இப்போது  பெட்ரோல் விலையை குறைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்