முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி விசா விவகாரம்: கொள்கையில் மாற்றம் இல்லை

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், நவ.16 - குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விசா தொடர்பாக தங்களது  கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானபேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு பிறகு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு விசா தர அமெரிக்கா மறுத்துவிட்டது. குஜராத்தில் நடந்த வகுப்பு கலவரத்திற்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடிதான் முக்கிய காரணம் என்ற காரணத்தின் அடிப்படையில் அப்போது விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. இதுகுறித்து இப்போது வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். நரேந்திரமோடிக்கு விசா வழங்குவதில் மறு பரிசீலனை ஏதேனும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த பிளேக், இந்த விஷயத்தில் அமெரிக்காவின் விசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். குஜராத் மாநிலத்தில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் கையோங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அப்படி இருந்தாலும்கூட நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா தனது கொள்கையை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே பிளேக்கின் இந்த கருத்து வெளிப்படுத்துகிறது. 

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் குஜராத் ஒரு முக்கியமான மாநிலம்தான். அம்மாநிலத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ஏராளமான முதலீட்டை செய்துள்ளன. இருந்தாலும்கூட மோடிக்கு விசா வழங்குவதில் முந்தைய நிலையே தொடரும் என்றும் பிளேக் கூறினார். குஜராத்தில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும். அம்மாநிலத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் பிளேக் கூறினார். இந்திய மாநிலங்களுடனான நட்புறவை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும். அமெரிக்காவில் உள்ள மாநிலங்களுக்கும் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கும் இடையே தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை அபிவிருத்தி செய்ய சமீபத்தில் அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரீட்டா லூயிஸ் இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளதையும் பிளேக் சுட்டிக் காட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்