கவுரவ கொலை செய்த 15 பேருக்கு தூக்குத்தண்டனை

Image Unavailable

 

மதுரை, நவ.19 - குடும்ப கவுரவத்திற்காக காதலர்களை கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பர்சானா பகுதியை சேர்ந்தவர்கள் ரோஷினி, பிஜேந்தர். வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முயன்றனர். இந்த காதல் ஜோடிக்கு ராம்கிஷன் என்பவர் உதவி செய்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஊர் பஞ்சாயத்தார் கூடி ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ள முயன்ற காதல் ஜோடியையும், இதற்கு உதவிய ராம் கிஷனையும் கவுரவ கொலை செய்யும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த 1991 ல் இந்த மூவரும் மரத்தில் தொங்கவிட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். 16 பேர் வழக்கு நடக்கும் காலத்திலேயே இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு, சிறார் கோர்ட்டில் நடக்கிறது. இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த மதுரா மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி உபாத்யாயா இந்த வழக்கில் தொடர்புடைய 34 பேரில் 15 பேருக்கு மரண தண்டனையையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையையும் விதித்து தீர்ப்பு கூறினார். ஒருவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். கவுரவ கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ