உ.பி.மாநிலத்தை 4-ஆக பிரிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

Image Unavailable

 

லக்னோ, நவ.-  22 - உத்தர பிரதேச மாநிலத்தை 4 பிரிவுகளாக பிரிக்கும் தீர்மானம் நேற்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தை 4 பிரிவுகளாக பிரிக்க அம்மாநில முதல்வர் மாயாவதி திட்டமிட்டுள்ளார். இதற்கான நகல் வடிவம் தயாரிக்கப்பட்டு அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பிறகு இது தொடர்பான தீர்மானம் உ.பி. சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை  சட்டசபை கூடியதும் சமாஜ்வாடி  கட்சியும், பா.ஜ.க.வும் மாயாவதி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானங்களை கொண்டு வந்தன. இந்த தீர்மானங்கள் மீது உடனடியாக விவாதம் நடத்தி அதை  ஓட்டெடுப்பிற்கு விட வேண்டும் என்றும்  அந்த கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால்  இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பின்னொரு நாளில் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் சுக்தேவ்  ராஜ்பார் கூறினார்.  ஆனால் சபாநாயகரின் அந்த  யோசனையை  எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சிக்குள்ளேயே 70 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு  தங்களுக்கு இருப்பதாகவும் அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும்  தங்களுக்கு இருப்பதாகவும் சமாஜ்வாடி கட்சி சார்பில் கூறப்பட்டது.

இதனால் சபையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஒரு புறம் அமளி  நிலவிய நிலையில்  உ.பி.யை 4 பிரிவுகளாக பிரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு சபையில் அமளி அதிகரித்த நிலையில் சபாநாயகர் சுக்தேவ் ராஜ்பார்  சபையை மறு தேதி குறிப்பிடாமல்  ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ