அத்வானியின் இல்லத்தில் பா.ஜ.க தலைவர்கள் முக்கிய ஆலோசனை

Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 22 - பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குவதை முன்னிட்டு  பாராளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து  பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் நேற்று மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வீட்டில் கூடி விவாதித்தனர். பாராளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய  அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பா.ஜ.க. தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள பா.ஜ.க. மூத்த  தலைவர் எல்.கே.அத்வானி வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எல்.கே.அத்வானி,  கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரி, லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்ய சபை எதிர்க்கட்சி  தலைவர் அருண் ஜேட்லி, மற்றும்  பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் அலுவாலியா, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு,  ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சிங், ரவி சங்கர் பிரசாத், சாந்தகுமார், ஆனந்த் குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.பாராளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது குறித்து  இவர்கள் விவாதித்தனர். ஊழல் , கறுப்பு பணம்,  விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் கிளப்பி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஓரம் கட்ட பா.ஜ.க. எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காலையில் வகுக்கப்பட்ட இந்த வியூக திட்டங்கள் மாலையில் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ