முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஊழல்: ஆந்திர ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், டிச.2 - முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு இரும்பு சுரங்கங்களை முறைகேடான முறையில் ஒதுக்கிய வழக்கில் ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீலட்சுமியை நேற்று சி.பி.ஐ. கைது செய்தது. ஸ்ரீலட்சுமியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஏராளமான இரும்பு சுரங்கங்கள் உள்ளன. கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் பெல்லாரியில் உள்ள சில இரும்பு சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். அந்த சுரங்கங்கள் அவர்களுக்கு முறைகேடான முறையில் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதே போல் ஆந்திர மாநிலம் அனந்தபூரிலும் ரெட்டி சகோதரர்களுக்கு முறைகேடான முறையில் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது தொழில் துறை செயலாளராக இருந்த ஸ்ரீலெட்சுமி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சி.பி.ஐ. 3 முறை விசாரணை நடத்தியது. 

இந்த நிலையில் தற்போது குடும்ப நலத்துறை கமிஷனராக உள்ள ஸ்ரீலெட்சுமி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. 

இருதய நோயாளி என்பதால் சிறையில் தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று லட்சுமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஸ்ரீலெட்சுமியை மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஸ்ரீலெட்சுமி சி.பி.ஐ. அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீலெட்சுமியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. க்கு அனுமதி அளித்தது. கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலெட்சுமியின் கணவர் கோபி கிருஷ்ணா சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்