முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.9 - 2 ஜி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி பாராளுமன்றத்தின் லோக் சபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் லோக் சபை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சாமி சி. பி. ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிதம்பரத்திற்கும் 2 ஜி ஊழலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சாமி கூறியுள்ளார்.

இந்த ஆதாரங்கள் தொடர்பாக வாதிட சுப்பிரமணியம் சாமிக்கு நேற்று சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்றத்தின் லோக் சபை நேற்று காலை கூடியதுமே பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பி னார்கள். 

அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

அப்போது அ.தி.மு.க.  மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் சிதம்பரத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.  எதிர்க்கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த முயன்ற சபாநாயகர் மீரா குமாரின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதை அடுத்து லோக் சபையை நண்பகல் 112 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்தி வைத்தார். பிறகு மீண்டும் சபை கூடிய போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. , அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களுக்கு பதிலடியாக ஆளும் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் எதிர்க்கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. 

விலைவாசி உயர்வு குறித்து முக்கியமான விவாதம் நடத்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது எனவே உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக இருந்து சபையை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சபாநாயகர் மீரா குமார் கேட்டுக்கொண்டார். சுமார் 10 நிமிட நேரம் சபாநாயகர் மீரா குமார் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பலிக்கவில்லை.  சபை தொடர்ந்து அமளி துமளியாக காட்சி அளித்ததால் சபையை இரண்டாவது முறையாக பிற்பகல் 2 மணி வரை  சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.

நடப்பு குளிர் கால கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 9 நாட்களாக முடங்கியிருந்த பாராளுமன்றம் நேற்று முன்தினம்தான்  அமைதியாக நடந்தது. இந்த ஒரு நாள் அமைதிக்கு பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கணக்காக  நேற்று பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும்  பாதிக்கப்பட்டன.

இதே போல ராஜ்ய சபையில் நேற்று காலை வழக்கம் போல கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் கேள்வி நேரம் முடிய 10 நிமிடம் இருக்கும் போது பா.ஜ.க. எம்.பி.க்கள் திடீர் என்று எழுந்து 2ஜி வழக்கில் தொடர்புடையை ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து  ராஜ்ய சபை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு சபை மீண்டும் கூடிய போதும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி  அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.  இதனால் சபையை பிற்பகல் 2 மணி வரை சபை துணை தலைவர் ரகுமான் கான் ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்