முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.14 - முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க சுப்ரீம்கோர்ட்டு மறுத்துவிட்டது. இது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது. பொறுமை காக்கும்படி இருமாநிலங்களையும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.  120 அடியாக குறைக்கக்கூடாது என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை கேட்ட தென்மாவட்ட மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.  முல்லைப்பெரியாறு அணையானது தமிழகத்தையொட்டியுள்ள கேரள பகுதியில் இருக்கிறது. இந்த அணை கட்டப்பட்டு நூறாண்டுகளுக்கும் மேலாகிறது. அணை பழமையாகிவிட்டது. அணை உடைந்தால் அணைக்கு கீழ் வாழும் மக்களுக்கு ஆபத்து என்று யாரோ வதந்தியை கிளப்பிவிட்டு அது மலையாளம் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இந்த பொய் செய்தியை நம்பி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துவிட்டது. அதனால் தென்மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிலம் பாசன வசதி பெறாமல் தரிசாக கிடக்கிறது. மேலும் இரண்டு போகம் விளைந்த 2 லட்சத்திற்கு மேற்பட்ட நிலத்தில் ஒரு போக சாகுபடிதான் நடக்கிறது. இந்த பாதிக்கப்பட்ட நிலை இருக்கும்போது கேரள அரசானது மீண்டும் முரண்டு பிடிக்கத் தொடங்கியது முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்போவதாகக்கூறியதோடு அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்தது. அதோடு மட்டுமல்லாது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் கோரியது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கேரள அரசு 120 அடியாக குறைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் ரிட்மனுத்தாக்கல் செய்தது. அதோடு நில்லாமல் வன்முறையையும் தூண்டிவிட்டது. அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வீடுகளில் இரவு நேரத்தில் புகுந்து தாக்குவது, தீ வைப்பது, ஏலத்தோட்டங்களை சேதப்படுத்துவது போன்ற வன்முறையில் கேரள மக்கள் ஈடுபடத்தொடங்கினர். இதனால் இருமாநிலங்களுக்கும் இடையே கம்பம், போடி, ஆகிய பகுதிகளில் இருந்து போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

இதற்கிடையில் 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அணையின் நீர்மட்டத்தை முதலில் தீர்ப்பு வழங்கியது மாதிரி 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரியும் தமிழக அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் ரிட்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அணை விவகாரம் தொடர்பாக பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் நேற்று சுப்ரீம்கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் கேரள அரசின் மனுவையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். அதேசமயத்தில் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் தேவையில்லாமல் அறிவிப்புகளையும் அறிக்கைகளையும் விட வேண்டாம் என்றும் எரியும் தீயை அணைப்பதற்கு பதிலாக எண் ணெய் ஊற்ற வேண்டாம் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். 

முல்லைப்பெரியாறு அணையை வன்முறையாளர்கள் உடைத்து விடலாம். அதனால் அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு தனது நிலையை விளக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது மாதிரி இருமாநிலங்களும் செயல்படுகின்றன. இது தவிர்க்கப்பட்டு அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதற்கிடையில் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளதை வரவேற்று தென்மாவட்ட மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேனி, போடி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி,திருமங்கலம் மற்றும் சிவகங்கை, திண்டுக்கள், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் தெருக்களில் கூடி ஆரவாரம் செய்து ஒருவருக்கொருவர் சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்