முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் 5 பேரை கைது செய்தது சிங்களப்படை

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், டிச.16 - நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும், அவர்களது விலையுயர்ந்த மீன்களை பறிமுதல் செய்தும், அவர்களது மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியும் வருவது தொடர்கதையாகி விட்டது. இத்தகைய சம்பவங்களால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இலங்கை கடற்படையின் இத்தகைய தொடர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் செய்வதறியாது மீளாத் துயரில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28 ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் காங்கேசன் துறை போலீசார் மீனவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைதான மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் 30 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் டிசம்பர் 8 ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். 

இந்த நிலையில் சிறையில் உள்ள 5 மீனவர்களும் வரும் 19 ம் தேதி வரை சிறை காவலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் மீனவர்களை மீட்க மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராய் உறுதியளித்தார். அவரது உறுதியை ஏற்று கடந்த 10 ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து இன்று 16 ம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மீனவர்கள் தீர்மானித்தனர். 

இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றது. இப்படகுகள் வழக்கம் போல் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பின்னர் தங்கச்சிமடத்தை சேர்ந்த அற்புதராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். அப்படகில் இருந்த மீனவர்கள் சந்திரன், மாரி, பத்மநாபன், ஜஸ்டின், ஆலிவர் ஆகிய 5 பேரையும் படகுடன் கைது செய்து யாழ்ப்பாணம் மாவட்டம் குயின்ஸ் டவர் எனும் இடத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony