முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டில் 56,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 20 -  நாட்டின் மிக உயரிய நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 56,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு  மத்திய சட்டத்துறை அமைச்சர்  சல்மான் குர்ஷித் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் வரை உள்ள நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 56,383 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார். இந்த வழக்குகளில் 20,334 வழக்குகள் ஓராண்டிற்கு மேலாக உள்ளன என்றும் ஆனால் இவற்றை நிலுவை வழக்குகள் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். மீதமுள்ள 36,049 வழக்குகள் தான் நிலுவையில் உள்ளன என்றும் அவர் கூறினார். இதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் 42,17,903 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும்  இது கடந்த செப்டம்பர் மாத கணக்கின்படி கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன என்றும் காலியாக இருக்கும் பதவிகளுக்கு  நீதிபதிகளை விரைவில் நியமிக்க  மாநில அரசுகளின் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன என்றும் குர்ஷித் தெரிவித்தார். அதிகமான வழக்குகள் போடப்படுகின்றன,  அதிகப்படியான வாய்தாக்கள் போடப்படுகின்றன, பழைய வழக்குகளை விரைவில் முடிக்க  முன்னுரிமை கொடுப்பதில்லை, போதுமான நீதிமன்ற ஊழியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால்தான் வழக்குகள்  தேங்குகின்றன என்றும் அவர் சொன்னார்.
மத்திய நிதி கமிஷனால் நீதித்துறை பரிபாலனத்தை மேம்படுத்துவதற்காக  பரிந்துரைக்கப்பட்ட  ரூ. 5,000 கோடி நிதியில் ஏற்கனவே மாநில அரசுகளுக்கு  ரூ. 1,325 கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நிதியைக் கொண்டு  மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான சிறப்பு நடுவர் நீதிமன்றங்களை  அமைத்தும் நீதிபதிகளை நியமித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
 நீதித்துறை அதிகாரிகளுக்கு இந்த நிதியின் மூலம்  பயிற்சியும் கொடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்