முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் நிறைவேறியது லோக்பால் மசோதா

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.29 - லோக்பால், லோக்ஆயுக்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அரசுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டு 43 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட லோக்பால் மசோதா தொடர்பாக காரசாரமான விவாதம் மக்களவையில் சுமார் 10 மணி நேரம் நடந்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

லோக் ஆயுக்தா அமைப்பது கட்டாயம் என முதலில் கூறப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என திருத்தம் செய்யப்பட்டது. அதே போன்று ராணுவம், கடலோர காவல்படை ஆகியவற்றை லோக்பால் வரம்பில் இருந்து நீக்குவதற்கும், திருத்தம் செய்ய அரசு ஒப்புக் கொண்டது. பிரதமரை விசாரிக்க லோக்பால் உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றிருந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் போதும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி வாக்கெடுப்புக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் லோக்பால் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. பெரிய தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் மசோதாவுக்கு 3 பிரிவுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமெனில் அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் அவையில் இருக்க வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும். ஆனால் இந்த திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் சுட்டிக்காட்டினார். இதையடுத்து இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாக மக்களவை தலைவர் மீராகுமார் அறிவித்தார். 

அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தந்து லோக்பால், லோக்ஆயுக்தாவை வலுப்படுத்துவதால்தான் இந்த மசோதாவின் நோக்கம். ஆனால் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவே காரணம். ஆளும் கட்சிக்கு போதிய எண்ணிக்கை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடித்து விட்டன. இது ஜனநாயகத்துக்கு சோகமான நாளாகும். மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார். 

அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால் ஆட்சியில் நீடிக்கும் உரிமையை காங்கிரஸ் இழந்து விட்டது என பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா கூறினார். குறைந்தபட்சம் 273 வாக்குகளை கூட காங்கிரஸ் பெற முடியவில்லை. 250 வாக்குளையே திரட்ட முடிந்தது. அரசின் கையாலாகத்தனத்தையே இது காட்டுகிறது. அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார் யஷ்வந்த்சின்கா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்