முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசம் பிரகாசிக்கிறதா? மாயவதிக்கு ராகுல் காந்தி கேள்வி

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

அம்பேத்கார்நகர், பிப்.- 3 - உங்களது ஆட்சியில் உத்தரபிரதேசம் பிரகாசிக்கிறதா? என்று உ.பி. முதல்வர் மாயாவதிக்கு  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தர பிரதேசத்தில் வருகிற 8ம்  தேதி தொடங்கி மார்ச் 3 ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி விட வேண்டும் என்ற உறுதியுடன்  காங்கிரஸ் பொதுச்செயலாளர்  ராகுல் காந்தி சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அம்பேத்கார்நகர்  என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான  முலாயம் சிங் யாதவ், உ.பி. முதல்வரும்  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். முஸ்லீம் மக்களுக்கு  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு போதுமான இட ஒதுக்கீட்டை செய்யவில்லை என்று முலாயம் சிங்  கூறுகிறார்.  அவர் உத்தர பிரதேசத்தில் 3 முறை முதல் அமைச்சராக இருந்திருக்கிறார்.  ஆனால் அவர் அப்போது முஸ்லீம் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அப்படிப்பட்டவர் இப்போது முஸ்லீம் மக்களுக்காக வக்காலத்து வாங்குகிறார். உ.பி. மாநிலம் தனது ஆட்சியில் ஜொலிக்கிறது என்று மாயாவதி கூறி வருகிறார்.  எங்கே ஜொலிக்கிறது? என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.
முஸ்லீம்களுக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு  அளிக்க இயலாது என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லி விட்டது.  ஆனால் முஸ்லீம்களுக்கு 28 சதவீத  இட ஒதுக்கீடு அளிப்பேன் என்று முலாயம் சிங் பொய்யான வாக்குறுதியை அளித்து வருகிறார் என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். மின்சாரம், குடிநீர், இட ஒதுக்கீடு எனறு பல்வேறு வாக்குறுதிகளை முலாயம்சிங் அளித்து வருகிறார். ஆனால் அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார் என்பது மக்களுக்கு  நன்றாக தெரியும். மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த போது செய்ய முடியாததை  முலாயம் சிங் மீண்டும்  எப்படி செய்ய முடியும் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மாயாவதியோ உ.பி. ஜொலிக்கிறது என்ற பொய்யான தோற்றத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்