Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் கடும் அமளி எதிரொலி: பார்லி. இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      இந்தியா
Parlimanet 2024-06-30

புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு அவை நடவடிக்கைகள் முதல் நாளே முடங்கின.

முதல் நாளில்...

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டி.ஆர் பாலு, அகிலேஷ் யாதவ் என ஏறக்குறைய முழு அவையும் நிரம்பி இருந்தது.

இரங்கல் குறிப்புகள்...

தொடக்க நிகழ்வாக, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். கிஷன் கபூர் (இமாச்சலப் பிரதேசம்), பகத் ராம் (பஞ்சாப்), குமரி அனந்தன் (தமிழ்நாடு), கிரிஜா வியாஸ் (ராஜஸ்தான்), மினாட்டி சென் (மேற்கு வங்கம்), சுக்தேவ் சிங் திண்ட்சா (பஞ்சாப்), சோட்டி சிங் யாதவ் (உத்தரப் பிரதேசம்), ஆனந்த் சிங் (உத்தரப் பிரதேசம்) ஆகிய மறைந்த உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்பு மற்றும் சாதனைகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்காக அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த சபாநாயகர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் துளிகூட ஏற்காது என குறிப்பிட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு...

இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

அவை ஒத்திவைப்பு...

இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அமளி நீடித்து வந்த நிலையில், சில உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். எனினும், அமளி தொடர்ந்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து, அவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. மீண்டும் அவையில் அமளி ஏற்பட்டதை அடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

18 நோட்டீஸ்கள்... 

இதேபோல், மாநிலங்களவை அதன் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் கூடியது. பிரேந்திர பிரசாத் பைஷ்யா, கானாட் புர்கயஸ்தா ஆகியோர் மாநிலங்களவையின் புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர். அவையை தொடங்கிவைத்துப் பேசிய ஜக்தீப் தன்கர், “விதி எண் 267ன் கீழ் விவாதிக்க 18 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், கீழடி அகழாய்வு அறிக்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ள இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அது இந்திய விவசாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன.” என தெரிவித்தார். மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவை பேச அழைத்தார்.

அரசு விளக்கம் அளிக்க.... 

அவையில் பேசிய கார்கே, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எதிர்க்கட்சிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. அதேநேரத்தில், போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்காவே காரணம் என அதன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். போர் நிறுத்தத்துக்கு முன்வராவிட்டால் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என தான் கூறியதை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். மேலும், 5 ஜெட் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாகவும் கூறி இருக்கிறார். இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

பிரதமர் விளக்கம் அளிக்க....

இதற்கு பதில் அளித்துப் பேசிய மாநிலங்களவை தலைவர் ஜே.பி. நட்டா, “எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இதை அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், விதி எண் 267ன் கீழ் இதை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருப்பதை ஏற்க முடியாது.” என தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

விவாதிக்க வேண்டும்... 

அப்போது பேசிய ஜக்தீப் தன்கர், “இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். ஒருங்கிணைந்த விவாதத்துக்கு அரசு தயாராக உள்ளது. தலைவர்களைச் சந்தித்து விவாதத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எவ்வளவு நேரம் விவாதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம் விவாதிப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்” என தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை 12 மணிக்குக் கூடியதை அடுத்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து