முக்கிய செய்திகள்

விண்ணை முட்டும் சோளம் விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி:

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      வேளாண் பூமி
paeir-1

 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிறுதானியங்களின் களஞ்சியம் என்றழைக்கப்படும் சிவரக்கோட்டை கிராமத்தில் தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு சோளம் அமோகமாக விளைந்துள்ளது அப்பகுதியிலுள்ள மானாவாரி விவசாயிகள் மகிழச்சியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதியில் உள்ள தஞ்சை பகுதி அதிகளவு நெல் விளைச்சல் காரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று புகழ்பெற்று விளங்குகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை எனப்படும் சின்னஞ்சிறிய கிராமம் தமிழக வேளாண்துறையின் சீர்மிகு திட்டங்களை சிரமேற்கொண்டு கடைபிடித்து சிறுதானிய உற்பத்தியில் மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சிறுதானியங்களின் களஞ்சியமாக தற்போது உருவெடுத்துள்ளது.கண்மாய் பாசனம்,கிணற்றுநீர் பாசனம் மற்றும் மழையை நம்பிய மானாவாரி பாசனம் என்று பல்வேறு கட்ட பாசன முறைகளை பின்பற்றி சிறுதானியங்கள் உற்பத்தில் சிவரக்கோட்டை கிராமம் தற்போது தன்னிறைவு பெற்று திகழ்கின்றது.இதனால் சிவரக்கோட்டை கிராமம் சிறுதானியங்களின் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

அண்மையில் சிவரக்கோட்டை பகுதியில் பெய்த மழையினை நம்பிய மானாவாரி விவசாயிகள் பெரும்பாலானோர் தங்களது விளைநிலங்களில் சோளம் விதைத்திருந்தனர். சிவரக்கோட்டை  பகுதியிலுள்ள மண்ணின் தன்மை சிறுதானிய பயிர்கள் விளைவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்ததால் தற்போது சோளம் விளைச்சல் அமோகமாக உள்ளது.அதிலும் குறிப்பாக சிவரக்கோட்டை மலையூரணி பகுதியைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம் விண்ணை முட்டும் அளவிற்கு அசுரத்தனமாக வளர்ந்து நல்ல விளைச்சலை தந்துள்ளது.

எப்போதும் இல்லாத அளவில் வளர்ந்திருக்கும் சோளப்பயிர் 15அடி முதல் 20அடி வரையில் உயரமாக வளர்ந்திருப்பது விவசாயிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் பெடை குருவிகளின் படையெடுப்பினால் தங்களது சோளம் மகசூல் குறைந்திடக்கூடாது என்ற நோக்கில் விவசாயிகள் இரவும் பகலுமாக தங்களது விளைநிலங்களை காவல் காத்து வருகின்றனர்.விரைவில் அறுவடை செய்யப்படவுள்ள இந்த சோளம் விவசாயிகளுக்கு பொருளாதாரம் உயர்ந்திட பெருமளவு கைகொடுத்திடும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பாhப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: