முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாய் இருந்தும் வாய் இல்லாப் பிராணிகள் என்று கூறுவது ஏன்?

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்...!

உலகில் இறைவன் படைத்துள்ள 84 லட்சம் பிறவிகளுள் மிக உயர்ந்த பிறவி மானுடப்பிறவி. அதனால் தான் ஔவையார் அரிது அரிது மானிடராதல் அரிது என்றார். மனிதர்களாகிய நாம் மனதை உடையவர்கள். மனம் சிந்திக்கும் கருவி. இறைவன் கொடுத்துள்ள ஒவ்வொரு உறுப்பும் நமக்குப் பயன்படுமாறு படைத்துள்ளான். கைகளால் எல்லாகாரியங்களையும் செய்கிறோம். கால்களால் நடக்கிறோம். காதுகளால் கேட்கிறோம். கண்களால் பார்க்கிறோம். அப்பர் சுவாமிகள் ஒவ்வொரு உறுப்பையும் நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

இதுநாள் வரை பொன், பொருள் போகத்திற்காக அற்ப மனிதர்களையும் சிறு தெய்வங்களையும் வணங்கி வந்ததை விடுத்து, பிறப்பும் இறப்பும் இல்லாத அந்தப் பரம் பொருளை தலையாலே இறைவனாரின் திருஉருவையே மனதில் இருத்திப் பழக வேண்டும். வேண்டாச் செய்திகளையும், வெட்டிப் பேச்சுகளையும் காதால் கேட்காமல் புகழ்நாமம் செவிகேட்ப என்ற சம்பந்தப் பெருமானின் அருள்வாக்கின்படி இறைவனுடைய புகழையே கேட்டுப் பழகினால் மனம் ஒருநிலைப்படும்.

தேவையில்லாததையெல்லாம் நினைத்துப் பழகிய நம் நெஞ்சத்தை இறைவனுடைய திருப்புகழை மட்டுமே நினைக்குமாறு பழக்கினால் இறைவன் எப்படி, நினைப்பவர் மனத்தையே கோயிலாகக் கொண்டு குடிபுகுவான் என்று அப்பர் சுவாமிகள் அருள்கிறார். நமது உறுப்புகளை மட்டுமல்ல, நமது உடலுக்கு உள்ளே உள்ள சிறுநீரகம், இதய வால்வுகள் போன்றவற்றையும் இரண்டு இரண்டாக நமக்கு அருளியுள்ள இறைவனின் பெருங்கருணையை நினைத்துப் பார்க்க வேண்டும். இரண்டு உறுப்புகளில் ஒன்று பழுதாகி வேலை செய்யவில்லை என்றாலும் மற்ற உறுப்பின் துணை கொண்டு நம் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பளித்துள்ளான் இறைவன், இந்த இரண்டு உறுப்புகளும் ஒரே வேலையைத் தான் செய்கின்றன.

ஆனால் மனிதனுக்கு ஒரே வாயை மட்டுமே படைத்தான். அது மட்டுமல்ல. மற்ற இரண்டு இரண்டு உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைத் தான் செய்கின்றன. சிறுநீரகங்கள், இதய வால்வுகள் எல்லாவற்றுக்கும் ஒரே வேலையை வைத்தான் இறைவன். ஒரே வாய்கொண்டு உணவு உண்ணவும், பேசவும் வைத்தான் இறைவன். எல்லா உயிர்களும் வாயினால் உண்ணும் வேலையை செய்கின்றன. ஒரு கூடைத் தவிடு, ஒருகட்டுப்புல் உண்ணும் அகன்ற பெரிய வாயையுடைய மாட்டை வாயில்லாப் பிராணி என்கிறோம். அதிகத்தீனி உண்ணுகின்ற யானையும் வாய் இல்லாப் பிராணிதானே. ஆனால் உண்பதால் மட்டுமே வாயை, வாய் என்று பெரியோர் கூறுவதில்லை. பேச வேண்டியவைகளைப் பேசுகின்ற வாயே வாய் என்றார்கள்.

வடிவேலன் தன்னை பேசா வாயென்ன வாயே, வள்ளி மணாளனைப் பேசாவாயென்ன வாயே  என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைவர்கள் கூறுகிறார்.

இறைவனுடைய பெருங்கருணையை இடையறாது நினைத்தால் அவ்வாறு ஆழமாக நினைக்கும்போது கருங்கல்லைப் போன்ற நம் மனம் தஞ்சத்து அருள்பரிவான் என்றார் அருணகிரி நாத சுவாமிகள். கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் நலம் என்று ஆமாறும் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் என்று கூறுகின்றார் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவனுடைய கருணை ஆயிரம் ஆயிரம் வகையாக நமக்கு அமைந்திருக்கிறது. இறைவன் தாயினும் சாலக் கருணை புரிகின்றான். பெற்ற தாய் இப்பிறவிக்கு மட்டும் உரியவள் இறைவன் பிறவிகள் தோறும் நமக்கு தாயாக விளங்குகிறான். தொடர்ந்து நின்ற தாயானை என்கிறார் அப்பர் சுவாமிகள்.

இந்த உடம்பை அருமையிலும் அருமையாகப் படைத்து இந்த உடம்புக்குள் எத்தனை எத்தனை வகையான நுண்ணிய கருவிகளையும் படைத்து உடம்பை இயக்க வைக்கிறான். நாம் தாய் வயிற்றில் இருந்த போதே இறைவன் நமக்கு உணவு தந்துள்ளான். பிறந்த பின்னர் குழுந்தைக்குத் தாய் பால் ஊட்டுகின்றாள். கருவில் உள்ள பிள்ளைக்கு அவளால் உணவு தர இயலாது. கருப்பைக்குள் முட்டைக்கும், கல்லுக்குள் தேரைக்கும் விருப்போடு உணவளிக்கும் ஈசன் என்கின்றார் ஔவையார். கருவில் உள்ள குழந்தைக்கு இறைவன் உணவு ஊட்டுவதால் தான் அது பிறந்த உடன் கருப்பாக காட்டு மலம் கழிக்கின்றது. மேலும் அக்குழந்தை பிறக்கும் முன்பாக தாய்க்கு இரு மார்புகளிலும் பால்சுரக்க அருள்புரிகின்றான் இறைவன்.

ஞான சூரியனாக விளங்கிய அருணகிரி நாதசுவாமிகள் முருகனிடம் ஒருவரம் கேட்கின்றார்.  முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்றருள்வாய் என்கிறார். எனவே நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்து இடையறாத பேரின்பத்தைப் பெறுவதற்கு இறைவனுடைய திருவருளை நினைத்து உள்ளம் உருகி நிற்பதே சிறந்த வழியாகும்.

டாக்டர் கே.பி.முத்துசாமி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!